logo
கோபியில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

கோபியில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

28/Feb/2021 06:29:21

ஈரோடு, பிப்:கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிதேவி தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. 

இதில் தேர்தல் விதிமுறைகள் கடைபிடிப்பது பிரச்சார கூட்டங்கள் மற்றும் வாகனங்களுக்கு அனுமதி வழங்குவது சுவர் விளம்பரங்கள் செய்வது போன்ற பல்வேறு விஷயங்கள்  விவாதிக்கப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. தேர்தல் ஆணையம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனி தேர்தல் அதிகாரிகளை நியமித்தும் கண்காணிப்பு குழு பறக்கும் படைகளை அமைத்தும் தேர்தல் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுவருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்திற்கு தேர்தல் நடத்தும் அதிகாரியான பழனிதேவி தலைமை வகித்தார்.

 இக்கூட்டத்தில் அரசியல் கட்சியர் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்களுக்கும் மாணவர்களும் இடையூறு இன்றி பிரச்சாரம் மேற்கொள்ளவேண்டும் என்றும் பள்ளிகள் கோயில்கள் மசூதிகள் மற்றும் தேவாலயங்களின் அருகில் ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. 

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள விதிமுறைகளின் படி பிரச்சாரம் மேற்கொள்ளவேண்டும் என்றும் அதேபோல் பிரச்சார கூட்டங்கள் மற்றும் பிரச்சார வாகனங்கள் அனுமதி பெற்று செயல்படுத்தவேண்டும்.

 சுவர் விளம்பரங்கள் உரிமையாளர்களின் அனுமதி கடிதம் பெறவேண்டும். கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றுதல் அரசியல் கட்சி பெயர் பலகைகளை அகற்றுதல் போன்றவற்றை அந்தந்த கட்சியினர் அப்புறப்படுத்தவேண்டும் என அறிவுறுத்தப் பட்டது. வாக்கு சேகரிக்க செல்லும் போது 5 நபர்கள் மட்டுமே செல்லவேண்டும் எனவும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். 

அதனை தொடர்ந்து திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்காக ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் அனுமதியின்றி அரசியல் கூட்டகள் நடத்தவும் ஆலோனைக் கூட்டத்திற்கும் மண்டபங்களில் அனுமதியளித்தால் திருமணமண்டபங்கள் சீல் வைக்கப்படும் என்றும் வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தவர்கள் தங்கும் விடுதியில் தங்கினால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Top