logo
போராட்ட வழக்குகள் ரத்து: கீரமங்கலத்தில் நக்கீரர் சிலை முன்பு மரக்கன்றுகள் வழங்கி நன்றி தெரிவித்த விவசாயிகள்.

போராட்ட வழக்குகள் ரத்து: கீரமங்கலத்தில் நக்கீரர் சிலை முன்பு மரக்கன்றுகள் வழங்கி நன்றி தெரிவித்த விவசாயிகள்.

24/Jun/2021 08:19:54

புதுக்கோட்டை: மீத்தேன், நியூட்ரினோ, 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்ததற்கு கீரமங்கலத்தில் நக்கீரர் சிலை முன்பு மரக்கன்றுகள் வழங்கி விவசாயிகள் வியாழக்கிழமை மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு கடந்த 2017-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் 200 நாட்களுக்கு மேல் தொடர் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். அப்போது, ஆலங்குடி, கீரமங்கலம், வடகாடு, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டங்களும் நடைபெற்றன. இதுதொடர்பாக சுமார் 75 பேர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டன. இதனால், வெளிநாடு உள்ளிட்ட வேலைவாய்ப்புகளுக்கு இளைஞர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென போராட்டக்குழுவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் மீத்தேன், நியுட்ரினோ, 8 வழிச்சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாக சட்டப்பேரவையில் அறிவித்தார். அதில், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. இதைத்தொடர்ந்து, சுற்றுச்சூழல், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வழக்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததுள்ளார். தொடர்ந்து, கீரமங்கலம் மெய்நின்றநாதர் கோயிலில் உள்ள நக்கீரர் சிலைக்கு விவசாயிகள் மாலை அணிவித்தனர். தொடர்ந்து சிலை முன்பு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினர். மேலும், வழக்குகளை ரத்து செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்

 

Top