logo
2021-ஆம் ஆண்டில் தமிழகத்தில் மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சி உறுதி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பேச்சு

2021-ஆம் ஆண்டில் தமிழகத்தில் மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சி உறுதி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

19/Dec/2020 05:12:03

சேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது சொந்த தொகுதியான எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை இன்று(19.12.2020) துவக்கினார்.

2021–ம் ஆண்டு மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி என்றும், கனிமொழி அல்ல, தி.மு.க. தலைவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வந்தாலும் அண்ணா தி.மு.க.வை வீழ்த்த முடியாது என்றும் எடப்பாடி தொகுதி அண்ணா தி.மு.க.வின் எக்கு கோட்டை. 42 ஆண்டு காலமாக தி.மு.க. வெற்றி பெறாத தொகுதி என்றும் அவர் குறிப்பிட்டார்.

அண்ணா தி.மு.க. சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே. பழனிசாமி சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரிய சோரகையில் உள்ள சென்றாயப் பெருமாள் கோயிலில் பூஜை செய்து விட்டு முதல்கட்டமாக தனது சொந்தத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

வழக்கமாக இந்த கோயிலில் வழிபாடு செய்து விட்டு தான் தேர்தல் பிரச்சாரத்தை எடப்பாடி துவக்குவது வழக்கம். ஏற்கனவே இந்த கோயிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் இன்று மண்டல பூஜைகளிலும் கலந்து கொண்டார்.

கோவிலில் வழிபட்ட பின்னர் முதலமைச்சர் அங்கிருந்து சாலையில் நடந்து சென்று தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். வழிநெடுக கைகூப்பியவாறு சாலையின் இரு பக்கமும் திரண்டிருந்த மக்களை பார்த்து ஆதரவு திரட்டினார். வெள்ளமென திரண்டிருந்த மக்கள் வாழ்த்து கோஷம் எழுப்பி உற்சாகமாக முதலமைச்சரை வரவேற்றார்கள்.

முதலமைச்சருக்கு பின்னால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மக்கள் வெள்ளம் கரை புரண்டு வந்தது. இதன் பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நங்கவள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சீரங்கனூரில் மினி கிளினிக்கை துவக்கி வைத்து பேசினார். கொளுத்தும் வெயிலில் திறந்த ஜீப்பில் நின்றவாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவரது பேச்சை மக்கள் கைதட்டி பலத்த ஆரவாரம் செய்து வரவேற்றார்கள். சுமார் 30 நிமிட நேரம் அவர் மக்கள் மத்தியில் பேசினார்.

எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருவரும் தலைவர்கள். தோற்றுவித்த இயக்கம் அண்ணா தி.மு.க. ஆகும். அண்ணா தி.மு.க. சுமார் 31 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்துள்ளது. மிக அதிகமாக ஆட்சி புரிந்தது அண்ணா தி.மு.க. தான். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் அம்மாவும் அவர்களை தொடர்ந்து அம்மாவின் அரசும் தமிழகத்தில் தொடர்ந்து சிறப்பான ஆட்சியை செய்து வருகிறது. 31 ஆண்டு காலமாக மக்களுக்கு ஏராளமான திட்டங்களை வழங்கி இருக்கிறோம்.

எம்.ஜி.ஆரும், அம்மாவும் கண்ட கனவை இன்று அம்மாவின் அரசு – என் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. அம்மாவின் மறைவுக்கு பின் இந்த ஆட்சி 10 நாள் இருக்காது, 3 மாதம் இருக்காது, 6 மாதம் இருக்காது, இன்னும் ஒரு வருடம் தான் என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தார்கள். இன்று அண்ணா தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள், மக்கள் துணையுடன் 4 ஆண்டுகளாக அம்மாவின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த கால கட்டத்தில் பல்வேறு சோதனைகளை நாம் சந்தித்தோம்.

ஆட்சி பொறுப்பேற்றதும் கடும் வறட்சி நிலவியது. குடிநீர் பற்றாக்குறை இருந்தது. குடிதண்ணீர் இல்லை. அதனை சரிசெய்து தங்குதடையின்றி குடிநீர் வழங்கினோம். அதன்பின் புயல் – கடும் புயல் வந்தது. மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தார்கள். மக்கள் தடுமாறினார்கள். எங்களது அரசு வேகமாக துரிதமாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்களை நேரடியாக அனுப்பி களத்தில் இறங்கி நிவாரண பணிகளில் ஈடுபட்டார்கள். எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட நிவாரண பணிகள், நிவாரண உதவிகள் வழங்கப்பட்டதில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு தந்தது.

கொரோனா தொற்று வந்தது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் கடுமையான நோய். இந்த தொற்று நோய் மார்ச் மாதம் பரவத் தொடங்கியது. இன்னும் முடியவில்லை. ஆனால் அரசு இந்த நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலக சுகாதார அமைப்பு, மத்திய அரசு, மருத்துவ நிபுணர் குழு ஆகியோரின் ஆலோசனைப்படி அவர்கள் காட்டுகின்ற வழிமுறைகளை கையாண்டதால் கொரோனா பரவல் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவாக உள்ளது.

நான் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு செய்து வருகிறேன். இன்னும் ஒரு மாவட்டத்தை தவிர்த்து அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வந்து விட்டேன். ஒவ்வொரு கூட்டத்திலும் தக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறையும் மற்றும் பல்வேறு துறைகளும் சிறப்பான முறையில் செயல்பட்டதால் கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது.

நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு சென்று ஆய்வு நடத்தினேன். அப்போது கொரோனா தொற்று குறித்து கேட்டேன். கடந்த 2 நாட்களில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று தெரிவித்தார்கள். கடும் முயற்சியின் பலனாக ஒருவருக்கு கூட அங்கு கொரோனா ஏற்படவில்லை. இயல்பு நிலை அங்கு திரும்பி இருக்கிறது. இது அரசு எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி

பிரதமர் பாராட்டு

பிரதமர் ஒவ்வொரு மாதமும் காணொலி காட்சி மூலமாக அனைத்து மாநில முதலமைச்சர்க ளுடன் பேசி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள நிலைமைகள், என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என்றெல்லாம் கேட்டு வருகிறார். கடந்த மாதம் இதுபோன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசு சரியான முறையில் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்ததால் தொற்று குறைந்து உள்ளது. இதற்காக தமிழக அரசை பாராட்டுகிறேன் என்று பிரதமர் தெரிவித்தார். தமிழக அரசு எப்படி கொரோனா தொற்று பரவலை தடுக்க முயற்சிகளை எடுத்ததோ அதே போன்று மற்ற மாநிலங்களும் அதனை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். திறமை மிக்க அரசாக நமது அரசு செயல்படுகிறது.

துறை வாரியாக சாதனை, தேசிய விருது

அம்மாவின் அரசு துறைவாரியாக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளது. இதற்காக தேசிய விருதுகளை பெற்றிருக்கிறோம். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் நம்மை குற்றம் சாட்டுகிறார். இந்த ஆட்சி என்ன செய்திருக்கிறது? என்ன திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது? மக்கள் என்ன நன்மை பெற்றார்கள்? என்று கேட்டிருக்கிறார். அம்மாவின் அரசு சிறப்பான திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது.அந்த திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் சென்றிருக்கிறது. தேசிய அளவில் பல்வேறு விருதுகளை வாங்கி கொடுத்திருக்கிறோம் என்றார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.


Top