logo
கள்ளழகர் கோயிலில் டிச.25 -இல் சொர்க்கவாசல் திறப்பு:  துணை ஆணையர் அனிதா தகவல்

கள்ளழகர் கோயிலில் டிச.25 -இல் சொர்க்கவாசல் திறப்பு: துணை ஆணையர் அனிதா தகவல்

18/Dec/2020 06:23:27

மதுரை: வைணவத் திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் சிறப்பும் வாய்ந்த அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து, ராப்பத்து என்று விமரிசையாக நடத்தப்படும்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா டிச. 15-ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) தொடங்கி 24-ஆம் தேதி வரை பகல் பத்து உற்சவம் நடைபெறும். மேற்கண்ட நாட்களில் காலை வேளையில் சுவாமி கோயிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதி எதிர்புறம் உள்ள மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதனைத் தொடர்ந்து 25-ஆம் தேதி முதல் ஜனவரி 3-ஆம்  தேதி வரை ராப்பத்து உற்சவம் நடைபெறும். மேற்கண்ட நாட்களில் சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் உட்பிரகாரத்தில் எழுந்தருள்வார்கள்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 25-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 4.45 மணி முதல் 5.45 மணிக்குள் சொர்க்கவாசல் நடை திறக்கப்பட்டு கள்ளழகர் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார்.

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு கள்ளழகர் கோயில் மற்றும் இதன் உபகோவிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயில் ஆகிய 3 கோயில்களில் நடை திறப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, கள்ளழகர் பெருமாள் கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு நண்பகல் 12 மணி சார்த்தப்படும். பின்னர் மாலை 3.30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 7 மணிக்கு நடை சார்த்தப்படும்.

இதேபோல் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் மற்றும் வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு நண்பகல் 11. 30 மணி சாத்தப்படும். மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 7 மணி நடை சார்த்தப்படும். மேற்கண்ட தகவலை கோவில் உதவி ஆணையர் தி.அனிதா தெரிவித்துள்ளார்.

Top