logo
ஓராண்டில் 70 ஆயிரம் மரக்கன்றுகள் மியாவாக்கி காடு வளர்ப்பு: ரயில்வே நிர்வாகம் அசத்தல்

ஓராண்டில் 70 ஆயிரம் மரக்கன்றுகள் மியாவாக்கி காடு வளர்ப்பு: ரயில்வே நிர்வாகம் அசத்தல்

12/Dec/2020 07:58:29

ஈரோடு- டிச: ஈரோடு ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான 11 ஏக்கர் நிலத்தில் 70 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றது.

ஈரோடு ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான எலக்ட்ரிக் ரயில் பணிமனை வளாகத்தில் ஏராளமான காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடத்தை கட்டிடக்கழிவுகள், இரும்பு கழிவுகள் கொட்டுவதற்காக பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தது. இந்நிலையில் வீணாக கிடக்கும் நிலத்தில் பசுமை காடுகள் வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்த ரயில்வே நிர்வாகம் கடந்தாண்டு ஜூலை மாதம் பசுமை காடுகள் வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது.

 இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டுகாலம் நிறைவடைந்த நிலையில், 11 ஏக்கர் பரப்பளவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றது. வேம்பு, புங்கன், நாவல், அரசமரம் மற்றும் பழச்செடிகள் என 40 வகையான மரங்கள், செடிகளை நட்டுள்ளனர். இடைவெளி இல்லா அடர்காடுகள் அமைப்பில் நடப்பட்டுள்ள இந்த மரங்களால் நல்ல பயன் கிடைத்து வருவதாகவும், மரங்கள் அமைந்துள்ள பகுதியை சுற்றிலும் 2 டிகிரி வெப்பம் குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட பயணிகள் ஆலோனை குழு உறுப்பினர் இளங்கவி கூறியதாவது, ஈரோடு எலக்ட்ரிக் லோகோ ஷெட் பகுதியில் உள்ள காலியிடத்தை பசுமை காடுகளாக மாற்றும் திட்டத்திற்காக கடந்தாண்டு எங்களுக்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியது. பல்வேறு தொண்டு அமைப்புகளின் உதவியோடு 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு தற்போது பராமரிக்கப்பட்டு வருகின்றது. 

மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. குறைந்த நிலத்தில் அதிக மரங்களை அடர்த்தியாக நட்டு, சிறிய காடுகளை உருவாக்கி மழை மேகங்களை குளிர்வித்து மழைபொழிவை பெற்றுத் தருவதற்கு பெயர் மியாவாக்கி காடு வளர்ப்பு முறையாகும். இதன்பலன் தற்போது கிடைக்க தொடங்கி உள்ளது.

அதாவது ஈரோட்டின் பிற பகுதிகளை காட்டிலும் 2 டிகிரி வெப்பம் எலக்ட்ரிக் லோகோ ஷெட் பகுதியில் குறைந்துள்ளது. இதே போல மழைப்பொழிவும் கூடுதலாக உள்ளது. இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இளங்கவி கூறினார். 


Top