logo
ஈரோட்டில் நவம்பர் மாதத்தில்  கொரோனாவுக்கு 2,161 பேர் பாதிப்பு- 2,527 பேர் குணமடைந்தனர்

ஈரோட்டில் நவம்பர் மாதத்தில் கொரோனாவுக்கு 2,161 பேர் பாதிப்பு- 2,527 பேர் குணமடைந்தனர்

03/Dec/2020 09:00:24

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக  தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். அதேபோல் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வந்தனர்.இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை வேகமாக கடந்து. முதலில் மாநகராட்சி பகுதியில் வேகமாக பரவிய கொரோனா பின்னர் கோபி, சத்தியமங்கலம், அந்தியூர், கொடுமுடி, பெருந்துறை என மாவட்டம் முழுவதும் வேகமாகப் பரவத் தொடங்கியது.  குறிப்பாக முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சுகாதார பணியாளர்கள் ஒருங்கிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மாவட்டம் முழுவதும் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டன. இதில் சளி காய்ச்சல் இருமல் போன்ற அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பாதிப்பு உள்ளவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதன் காரணமாக மாவட்டத்தில் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை காட்டிலும் குணமடைந்து சென்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் வைரஸ் தாக்கம் உச்சத்தில் இருந்தது. நவம்பர் மாதத்தில் தீபாவளி பண்டிகை வரும் வரை தினசரி பாதிப்பு 100 -ஐ தாண்டி இருந்தது. ஆனால் தீபாவளி பண்டிகைக்கு பிறகு தினசரி பாதிப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கியது. தினசரி பாதிப்பு 50-க்கு கீழ் குறைய தொடங்கியது.

அதேநேரம் குணம் அடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தது. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் மாவட்டத்தில் கொரோனாவால் 2,161 பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால் அதே நேரம் நவம்பர் மாதத்தில் மட்டும் 2,527 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் நவம்பர் மாதத்தில் 15 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வரும் தொடர் தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் வைரஸ் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது.

நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரனோ வால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 12506 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 954 ஆக குறைந்துள்ளது. இன்றுக்குள் 12 ஆயிரத்தை நெருங்கி விடும். தற்போது மாவட்டம் முழுவதும் 413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Top