logo
நூலகத் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டுச் சான்று: ஆட்சியர் உமாமகேஸ்வரி வழங்கல்

நூலகத் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டுச் சான்று: ஆட்சியர் உமாமகேஸ்வரி வழங்கல்

02/Dec/2020 12:49:47

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது நூலகத் துறையின் சார்பில் சிறப்பான பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிச.1 -இல் நடைபெற்றது.

இதில் ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி பங்கேற்று விருதுகளை வழங்கியபிறகு கூறியதாவது: தமிழக அரசு  பொது நூலகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நூலகங்களில் சிறப்பாக செயல்படும் நூலகர்கள் மற்றும் வாசகர் வட்டத்திற்கும், அதிக உறுப்பினர்கள், புரவலர்களைச் சேர்த்த நூலகர்களுக்கும், அதிக தளவாடங்கள் போன்ற நன்கொடைகள் பெற்ற நூலகங்களைப்பாராட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நூலக வார விழாவில் கேடயம் வழங்கப்பட்டு, கௌரவிக்கப்படுகிறது. 

அதனடிப்படையில், நடப்பாண்டில் 5 மாவட்டங்களுக்கான சிறப்பாக பணியாற்றிய நூலகர்களுக்கு டாக்டர் .எஸ்.ஆர். அரங்கநாதன் விருது 24.11.2020 அன்று   தமிழக முதல்வரால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதே போன்று பிற மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூலகர்களுக்கும், வாசகர் வட்டத்திற்கும் அந்தந்த மாவட்டத்திலேயே கேடயங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. 

அந்த வகையில்  புதுக்கோட்டை மாவட்டம், வேந்தன்பட்டி கிளை நூலக மூன்றாம் நிலை நூலகர் துரைராஜ் என்பவருக்கு டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதும், கேடயம்,  சான்றிதழ், வெள்ளிப் பதக்கம் மற்றும் ரூ.5,000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. இதே போன்று வாசகர் வட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத்த்தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்திக்கு நூலக ஆர்வலர் விருதும்  வழங்கப்பட்டது. மேலும் மாநில அளவில் ஊர்ப்புற நூலகங்களுக்கிடையே அதிக உறுப்பினர்களைச் சேர்த்துள்ள  ஆவூர் ஊர்ப்புற நூலகத்திற்கு கேடயம் வழங்கப்பட்டுள்ளது. 

எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நுாலகர்கள் தொடர்ந்து இதுபோன்ற விருதுகளைப் பெறும் வகையில் பணியாற்ற வேண்டும் என்றார் ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி.

இதில்,வாசகர் வட்டத்தலைவர் கவிஞர்தங்கம்மூர்த்தி, மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார், கண்காணிப்பாளர் முகமது அர்ஷத், நுால் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Top