logo
கார்த்திகை தீபத்திருநாள்: புதுக்கோட்டையில்  குவிந்த அகல் விளக்குகள்...

கார்த்திகை தீபத்திருநாள்: புதுக்கோட்டையில் குவிந்த அகல் விளக்குகள்...

27/Nov/2020 09:51:56

புதுக்கோட்டை: கார்த்திகை தீபத்திருநாள் (நவ.29) நெருங்கிவரும் நிலையில் அதை தீபம் ஏற்றிக் கொண்டாடும் வகையில்  புதுக்கோட்டையிலுள்ள கோயில் சன்னதியில் அனைவரையும் கவரும் வகையில் பல்வேறு ரகங்களிலும், மாதிரிகளிலும் களி மண்ணில் தயாரான  வண்ண மயமான அகல் விளக்குகள்  விற்பனைக்காகக் குவிக்கப்பட்டுள்ளன.

கார்த்திகை மாதம் பிறந்ததும் முருகப்பெருமானுக்கும், ஐயப்பசுவாமிக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து கோயிலுக்குசென்று வழிபடுவது வழக்கம். இதே போல கார்த்திகை மாதத்தின் முக்கியமான பண்டிகையான கார்த்திகை தீபத் திருநாள்  ஒவ்வொரு இல்லத்திலும், வணிக நிறுவனங்கள், ஆலயங்களில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  3 நாள்கள் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிப்படுகின்றனர்.

 புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை குசலாக்குடி கிராமத்தில் கார்த்திகை தீபத்துக்காக மிகப் பெரிய அளவில்  அவ்வூர் மக்கள் குடிசைத் தொழிலாகச்செய்து வருகின்றனர். களிமண்ணில் கைகளால் தயாரித்த சிறிய, பெரிய சிட்டிகள்  மட்டுமே சிறிய, பெரிய விளக்குகள் உள்ளூர் சந்தையிலும் வெளிமாவட்டத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

ஆனால்,தற்போது களிமண்ணை இயந்திரம் மூலம் மைபோல அரைத்து பலவேறு வகையில் உருவாக்கப்பட்ட அச்சு மாதிரிகளைக் கொண்டு  (டை மாடல்) புதுச்சேரி, கொல்கத்தா, ராஜஸ்தான், மானாமதுரை, கும்பகோணம் போன்ற இடங்களில் தயாராகும் விளக்குகளும் விற்பனைக்கு வந்துள்ளது.

புதுக்கோட்டை நகரில் சாந்தநாத சுவாமி சந்நிதி வீதியில் கார்த்திகை தீப விளக்குகளின் பல  விதமான மாதிரிகளில் விளக்குகள் குவிந்துள்ளன. அதில், 5 முக விளக்குகள் மிக சிறிய, பெரிய அளவிலும், குத்து விளக்கு  மண்ணில் செய்யப்பட்ட கண்ணாடி மூடப்பட்ட (பழைய முட்டைகிளாஸ் விளக்கு) தட்டு விளக்குகளும், அம்மன் பொம்மை விளக்குகள், பிள்ளையார் விளக்குகள், அன்னப்பறவை விளக்குகள் அகல்விளக்குகள் போன்ற மாதிரிகள் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக அங்கு கடை வைத்துள்ள   சேகர் தெரிவித்தார்.


Top