logo
புதுக்கோட்டையில் புதிய பல் மருத்துவக்கல்லூரிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக்கல் நாட்டி வைத்தார்

புதுக்கோட்டையில் புதிய பல் மருத்துவக்கல்லூரிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக்கல் நாட்டி வைத்தார்

25/Feb/2021 10:57:07

புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டையில் புதிய அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டி வைத்தார்.

 மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: 

தமிழக  மக்களின் நலனுக்காக எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஏற்கெனவே சென்னைக்கு அடுத்த படியாக 108 கால் சென்டர் தொடங்கி  வைக்கப்பட்டது. 

இதேபோன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள சிறுநீரக ஒப்புயர்வு மையம் அருகில் சென்னைக்கு அடுத்த படியாக அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான பயிற்சி மையம்  ரூ.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் சார்பில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

மேலும்  முதல்வர் அறிவித்தபடி  புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் புதிய அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை 10.14 ஏக்கர் பரப்பளவில் ரூ.63.41 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக கட்டப்பட உள்ளது. 

இக்கல்லூரி சென்னைக்கு அடுத்த படியாக புதுக்கோட்டையில் அமைக்கப்பட உள்ளது. இந்த அரசு பல் மருத்துவக்கல்லூரி தரைத்தளம், முதல் தளம் ஆகிய தளங்களுடன் 4754.50 ச.மீ  பரப்பளவில் கட்டப்பட உள்ளது. இதன் தரைத்தளத்தில் முதல்வர் அறை, வகுப்பறை, ஆய்வகம், கூட்ட அறை, ஆசிரியர் மற்றும் பணியாளர் அறை, பல் மருத்துவ அறை உள்ளிட்ட பல்வேறு அறைகளும், முதல் தளத்தில் தேர்வு அறை, ஆய்வகம், வகுப்பறை உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. 

மேலும் அரசு பல் மருத்துவமனை தரைத்தளம், முதல் தளம் ஆகிய தளங்களுடன் 6140.24 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது. இதில் புறநோயாளிகள் பிரிவு, மருந்தகம், வகுப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. இதேபோன்று அரசு பல் மருத்துவக்கல்லூரி முதல்வர் குடியிருப்பு தரைத்தளத்துடன் 220.85 ச.மீ பரப்பளவிலும், மருத்துவப் பணியாளர் குடியிருப்பு தரைத்தளம், முதல் தளம் ஆகிய தளங்களுடன் 1258.70 ச.மீ பரப்பளவிலும் கட்டப்பட உள்ளது.

 

இதேபோன்று மருத்துவ மாணவர் விடுதி மற்றும் மாணவிகள் விடுதி தரைத்தளம், முதல் தளத்துடன் ஒவ்வொன்றும் தலா 1862.80 ச.மீ பரப்பளவிலும் கட்டப்பட உள்ளது. மேலும் சமையல் அறை மற்றும் உணவு அறை 625.90 ச.மீ பரப்பளவிலும் கட்டப்பட உள்ளது. இத்துடன் மின்சார வசதி, சூரிய மின்சக்தி  வசதி, பூங்காக்கள், தீத் தடுப்பு பாதுகாப்பு வசதி, குடிநீர் வசதி, பாதுகாப்பு சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் சிறப்பாக கட்டப்பட உள்ளது என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர். 

இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, அரசு பல் மருத்துவக்கல்லூரி முதல்வர் பிரேம்குமார், பொதுப்பணித்துறை மருத்துவப்பணிகள் செயற்பொறியாளர் நித்தியானந்தன், உதவிப்பொறியாளர் விக்னேஷ், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் த.ஜெயலெட்சுமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஆர்.கார்த்திக்தொண்டைமான், ஆர்.நெடுஞ்செழியன், மாவட்ட வேளாண் விற்பனைக்குழுத் தலைவர் க. பாஸ்கர், மாவட்ட கூட்டுறவு அச்சக சங்கத் தலைவர் சேட் மற்றும் அரசு அலுவலர்கள்  பலர் கலந்து கொண்டனர். 


Top