logo
கூடுதல் பணிச்சுமையால் போக்குவரத்துக்கழக அதிகாரி மரணம்: சிஐடியு கண்டனம்.

கூடுதல் பணிச்சுமையால் போக்குவரத்துக்கழக அதிகாரி மரணம்: சிஐடியு கண்டனம்.

13/Nov/2020 06:27:01

புதுக்கோட்டை: அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் எட்டுமணி நேர வேலைக்குப் பதிலாக 12 மணி நேரம் பணி செய்ய  நிர்ப்பந்திக்கப்படுவதால் போக்குவரத்துக்கழக அதிகாரி மரணமடைந்த சம்பவத்துக்கு சிஐடியு கண்டனம் தெரிவித்துள்ளது.

 இதுகுறித்து, புதுக்கோட்டை மண்டல அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றும் சீருடைப் பணியாளர்களுக்கு எட்டுமணி நேரம் வேலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், பயணச்சீட்டு ஆய்வாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஆகியோரை 12 மணிநேரம் வேலை பார்க்க புதுக்கோட்டை கழக நிர்வாகம் தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறது. இதனால், தொழிலாளர்கள் கடுமையான மன உளைச்சளுக்கும், மனச்சோர்வுக்கும் உள்ளாகி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அவர்களுக்கு மாரடைப்பு, சிறுநீரகப்பாதிப்பு, சர்க்கரை நோய்,  ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திற்கு வந்துகொண்டிருந்த புறநகர் பேருந்துகள் பிரிக்கப்பட்டு மன்னார்புரம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு மன்னார்புரம் பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் கடந்த வியாழக்கிழமை இரவு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மன்னார்புரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் டிராபிக் மேளாளராகப் பணியாற்றிய எஸ்.மதியழகன் உள்ளிட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மீது அப்பகுதி மக்கள் தகராறு செய்துள்ளனர்.

ஏற்கனவே உழைப்புச் சுரண்டலாலும் பணிச்சுமையாலும் அவதிப்பட்டு வந்த மதியழகனுக்கு இச்சம்பவம் மேலும் அதிச்சியளித்ததால் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொழிலாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் போது அந்தப் பகுதி மக்களிடம் எதிர்ப்பு வராமல் பார்த்துக்கொள்வது அரசு அதிகாரிகளின் கடமை. உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கு எட்டுமணி நேரம் மட்டுமே வேலை வழங்க வேண்டியது போக்குவரத்துக்கழக அதிகாரிகளின் கடமை. இவை இரண்டும் முறைப்டுத்தப்படாததால் ஒரு ஊழியரின் உயிர் பிரிந்துவிட்டது.

மேற்படி உயிரிழப்பு சம்பவத்திற்கு சிஐடியு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது . இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். உயிழந்த தொழிலாளரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 


Top