logo
நிவர் புயல்: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,000 கன அடி உபரி நீர் திறப்பு

நிவர் புயல்: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,000 கன அடி உபரி நீர் திறப்பு

25/Nov/2020 01:29:11

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதற்கட்டமாக 1000 கனஅடி நீர் இன்று திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக  அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு விடப்பட்டுள்ளது

வங்கக் கடலில் உருவான, ‘நிவர்’ புயல் தீவிர புயலாக மாறி இன்று கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் செம்‌பரம்‌பாக்கம்‌ ஏரிக்கு ஒரு வாரத்திற்குப்‌ பின் மீண்டும் நீர்வ‌ரத்து அதிகரித்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி ஆகும். அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த மழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் 22 அடியை விரைவில் எட்ட உள்ளது.

இந்நிலையில், நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதற்கட்டமாக 1,000 கன அடி நீர் இன்று(நவ.25)திறந்து விடப்பட்டது. கடந்த 2015-ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது செம்பரம்பாக்கத்தில் தண்ணீர் திறக்கப்படுகிறது. செம்பரம்பாக்கத்தில் இருந்து 5 கண் மதகு வழியாக அடையாறு ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Top