logo
 நிவர்  புயல் இன்று(நவ.25) மாலை புதுச்சேரி காரைக்கால் இடையில் கரையை கடக்கும்: 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்

நிவர் புயல் இன்று(நவ.25) மாலை புதுச்சேரி காரைக்கால் இடையில் கரையை கடக்கும்: 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்

24/Nov/2020 11:09:03

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் புயலாக வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் நிவர் புயலானது புதுச்சேரிக்கு அருகே நாளை பிற்பகலில் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், வங்கக் கடலில் சென்னையிலிருந்து 450 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 410 கி.மீ. தொலைவிலும், நிவர் புயலானது காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை கடந்த 3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது.

புயலின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது அதன் நகரும் வேகத்திலும் மாற்றம் உண்டாவது வழக்கமானது தான். நேற்று பகலில் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, நள்ளிரவில் மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது. புயல் சின்னமானது நிலப்பகுதியை அணுகும்போது, அதன் வேகம் குறைவது இயல்பானது தான்.

வேகம் குறைந்தாலும், அது வலுப்பெறுவதில் மாற்றமில்லை. தற்போதைய கணிப்பின்படி அது புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கும்.நிவர் புயல் நாளை கரையைக் கடக்கும் நிலையில், திருவண்ணாமலை, புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், காரைக்கால் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை அதீத கனமழை பெய்யக் கூடும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, திருவாரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மணிக்கு 110 கி.மீ. வேகம் வரை காற்று வீசக் கூடும்.

நாளை புயல் கரையை கடக்கும் போது செங்கல்பட்டு, விழுப்புரம் கடலூரில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும். கடலோரப் பகுதிகளில் மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும், சில வேளைகளில் 120 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக் கூடும்.திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மணிக்கு 80 முதல் - 90 கி.மீ. வேகத்திலும், சில சமயம் 100 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக் கூடும்.

நாளை பிற்பகல் முதல் கடல் அலை வழக்கமான உயரத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். தமிழக கடற்கரையைப் பொருத்தவரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 9 செ.மீ. மழையும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 8 செ.மீ., சென்னை விமான நிலையம் 7 செ.மீ., கேளம்பாக்கத்தில் 6 செ.மீ., கொளப்பாக்கத்தில் 5 செ.மீ., பெரம்பூர், தரமணி 4 செ.மீ., செங்கல்பட்டு, பூந்தமல்லி, ரெட்ஹில்ஸ், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், அம்பத்தூர் ஆகியபகுதிகளில்தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. தாம்பரம், அம்பத்தூர், பெரம்பூர், கொரட்டூர், அயனாவரம், பழவந்தாங்கல், கோவிலம்பாக்கம், கோயம்பேடு, போரூர், பெருங்களத்தூர், வில்லிவாக்கம், நெற்குன்றம், சிட்லப்பாக்கம், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

Top