logo
புதுக்கோட்டை அருகே  தனியார் வாகனத்தில் எடுத்துச் சென்ற ரூ.3.17 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

புதுக்கோட்டை அருகே தனியார் வாகனத்தில் எடுத்துச் சென்ற ரூ.3.17 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

25/Mar/2021 03:36:14

புதுக்கோட்டை, மார்ச்:  புதுக்கோட்டை தொகுதிக்குள்பட்ட கேப்பரை பகுதியில் பறக்கும் படையினர் வியாழக்கிழமை மேற்கொண்ட வாகனத்தணிக்கையின்போது தனியார் கூரியர் வேனில்  உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூபாய் 3 கோடியே 17 இலட்சம் மதிப்புள்ள ஆறேமுக்கால் கிலோ  தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை தொகுதிக்குள்பட்ட கேப்பரை பகுதியில்  அலுவலர் அபிநயா தலைமை யிலான பறக்கும் படையினர் தீவிர வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது புதுக்கோட்டைக்கு  வந்த தனியார் கூரியர்  வாகனத்தை  நிறுத்தி தணிக்கை  செய்ததில் அதில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து  வாகனத்தை  தங்கத்துடன்  பறிமுதல் செய்த பறக்கும்படையினர் புதுக்கோட்டை தேர்தல் நடத்தும் அலுவலர் டெய்சிகுமாரிடம்  ஒப்படைத்தனர்.

தேர்தல் அலுவலர் மேற்கொண்ட  விசாரணையில் சேலத்திலிருந்து பட்டுக்கோட்டை சென்றுவிட்டு மீண்டும் அங்கிருந்து திரும்பி வந்து புதுக்கோட்டையில்  இந்தத்  தங்கத்தை விநியோகம் செய்வதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது. இந்த தங்கத்தின் மதிப்பு 3 கோடியே 17 லட்சம் என கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.  இதுகுறித்து  தேர்தல் அதிகாரிகள் மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Top