logo
28 -ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஆசிரியர் பயிற்சி முகாம் திருப்பத்தூரில் தொடக்கம்

28 -ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஆசிரியர் பயிற்சி முகாம் திருப்பத்தூரில் தொடக்கம்

21/Nov/2020 07:41:19

திருப்பத்தூர்:  28- ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2020 வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாமினை ஆட்சியர் ம.ப.சிவன் அருள் தொடங்கி  வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்ட  ஆட்சியர்  அலுவலகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழ்நாடு சார்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 28 -ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2020 வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாமினை  தொடங்கி வைத்து ஆட்சியர் ப.சிவன்அருள்  பேசியதாவது:

இந்த இயக்கமானது மத்திய அரசின் வழிகாட்டுலின்படி நாடெங்கிலும் உள்ள 10- முதல் 17 வயது வரையிலுள்ள அனைத்து குழந்தைகளிடமும் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்து அவர்களுக்கு இளம்விஞ்ஞானியாக உருவாக்கி பட்டம் வழங்கிடும் திட்டமாகும். 

இன்றைய கால குழந்தைகள்,மாணவ மாணவியர், இளைஞர்கள் நவீன கணினி உலகில் கைபேசி மற்றும் கணினியில் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்துக்கொள்கின்றார்கள். பள்ளி புத்தகங்களை தவிர பொது தகவல்கள், வரலாற்று நிகழ்வுகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் போன்ற புத்தகங்களை மாணவ மாணவியர்கள் படிக்கும் பழக்கம் குறைந்து விட்டது. கணினி மற்றும் கைபேசியில் விளையாட்டு பொழுதுபோக்கு விஷயங்களில் மூழ்கி விடுகின்றனர். இதனால் புத்தகம் வாசிக்கும் பழக்கம் பெரும்பான்மையானவர்களிடம் குறைந்து விட்டது.

இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் மாணவ மாணவியர்கள் தெரிந்து கொள்ள வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். உலகில் சிறந்த விளங்கியவர்கள் அனைவரும் எதிர்கால சந்ததியினருக்கு தெரிவித்த தகவல் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தி தங்களுடைய திறமைகளை வெளிக்கொண்டுவர கடுமையான முயற்சிகளை இடைவிடாமல் மேற்கொண்டால் நிச்சயம் வெற்றி காணலாம் என்பது வெற்றியாளர்களின் கருத்துக்கள் ஆகும்.

ஆகவே, அறிவியல் சார்ந்த புத்தகங்களை மாணவ மாணவியர்கள் படித்து தங்களின் கண்டுபிடிப்புகளை உலகிற்கு தெரியப்படுத்திட வேண்டும். பள்ளிகளில் மாணவ மாணவியர்ளின் திறமைகளை வெளிக்கொணரும் ஆசிரியர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். ஆகவே ஆசிரியர்கள் தங்களுடைய பணிகளை செய்து திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர இப்பயிற்சி முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று  அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணி, மாநில கருத்தாளர் காத்தவராயன், மாவட்ட தலைவர் அச்சுதன், செயலாளர் குணசேகரன், துணைத்தலைவர் இராமன், சத்தியமூர்த்தி, மாரிமுத்து மற்றும் ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.

Top