logo
தொடர் மழை எதிரொலி ஈரோடு நேதாஜி சந்தையில் காய்கனி விலைகள் கடும் உயர்வு

தொடர் மழை எதிரொலி ஈரோடு நேதாஜி சந்தையில் காய்கனி விலைகள் கடும் உயர்வு

21/Nov/2020 07:14:25

ஈரோடு நேதாஜி காய்கனி சந்தையில்  தற்காலிகமாக ஈரோடு வ.உ.சி பூங்காவில் செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கனி கடைகள் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் ஏராளமான மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் இங்கு வந்து காய்கனிகளை வாங்கிச் செல்வார்கள். இரவு முழுவதும் மொத்த வியாபாரமும், பகல் 12 மணி வரை ,சில்லறை வியாபாரமும் நடைபெற்று வருகிறது.

 இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்ததால் இன்று நேதாஜி காய்கனி மார்க்கெட்டில் காய் கனி  வரத்து  வழக்கத்தை விட குறைந்து போனது. தொடர் மழை எதிரொலியாக காய்கனி விளைச்சலும்  பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு குறைந்த அளவில் காய்கனிகள் வரத்தாகின. குறிப்பாக தக்காளி ,கத்தரிக்காய் விலை கடந்த வாரத்தை விட இந்த வாரம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் கிலோ 10 -15 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி இன்று 35-40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் 30 ரூபாயில் இருந்த 1 கிலோ கத்தரி  காய் இன்று 1 கிலோ  70 ரூபாயாகவும், 15 ரூபாயில் இருந்து 1 கிலோ புடலங்காய் 25 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. முள்ளங்கி 20 ல் இருந்து 30 ரூபாயாகவும், பீர்க்கன்காய் 20 ரூபாயில் இருந்து 30 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது.  ஆனால் கேரட் பீட்ரூட் பீன்ஸ் போன்றவற்றின் விலை கடந்த வாரத்தில் விற்ற விலைக்கு விற்பனையாகிறது அதில் மாற்றம் ஏதும் இல்லை.

இதுகுறித்து நேதாஜி காய்கனி மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, மாவட்டத்தில் தொடர் மழை  காரணமாக  பல்வேறு காய்கனிகளின் அறுவடை குறைந்துள்ளது. இதனால் வரத்து இல்லாததால் விலை அதிகரித்துள்ளது. வழக்கமாக மேச்சேரி, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி வருவது வழக்கம். தினமும் 2 ஆயிரம் பெட்டி வரத்து இருந்த நிலையில் இன்று ஆயிரம் பெட்டிகள் மட்டுமே தக்காளி வரத்தானது. இதேபோல் கத்திரிக்காய்  வரத்தும் வழக்கத்தை விட குறைந்துள்ளதால் விலை  கடுமையாக உயர்ந்துள்ளது என்றனர்.

Top