16/Jun/2021 08:17:03
ஈரோடு, ஜூன்: தேனி மாவட்டத்திலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்ட எச்.கிருஷ்ணனுண்ணி ஈரோடு மாவட்ட ஆட்சியராக புதன்கிழமை பொறுப்பேற்றார்.
பின்னர் நிருபர்களிடம் ஆட்சியர் எச்.கிருஷ்ணனுண்ணி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல்
அதிகமாக உள்ளதால், அதை கட்டுப்படுத்துவது முதல் பணியாகும். அதற்கான
நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும். அரசு விதிகளின்படி கொரோனாவுக்கான தடுப்பூசி போட முன் களப்பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும்
ஒதுக்கீடு செய்யப்படும்.
தற்போது வரத்தாகும் தடுப்பூசி எண்ணிக்கைக்கு ஏற்ப, அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், முகாம்களுக்கு ஒதுக்கீடு செய்து, விரைவாக போட்டு முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவமனைகளில் அரசின் காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு 10 சதவீதம் படுக்கை ஒதுக்குதல், கூடுதல் கட்டணம் பெறுதல் போன்ற புகார்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இம்மாவட்டத்தில்
நீர் நிலைகள் மாசுபடுதல் குறித்து, அதற்கான
துறை மூலம் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
என்றார் ஆட்சியர். இதில், டி.ஆர்.ஓ. ப.முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.பிரதிக் தயாள்
ஆகியோர் உடனிருந்தனர். ஈரோடு மாவட்ட ஆட்சியராக ஏற்கெனவே பணியாற்றிய சி.கதிரவன், தமிழ்நாடு மேக்னசைட்
லிமிடெட் மேலாண் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.