18/Nov/2020 10:14:52
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் வயது பேதமின்றி தாக்கி வந்தது. மேலும் முன் களப்பணியாளர்களான டாக்டர் நர்ஸ்கள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டனர்.
மாவட்டத்தில் வைரஸ் தாக்கம் அதிகரித்ததையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தன. அதன்படி தினமும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தன. மாவட்டம் முழுவதும் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டன.
இதைப்போல் காய்ச்சல் முகாம்களும் நடத்தப்பட்டன. இதன் மூலம் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பயனாக வைரசால் பாதிக்கப்பட்ட வர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பினார்.
இதேபோல் அறிகுறி இல்லாமல் வைரசால் பாதித்தவர்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் குணமடைந்தனர். இவ்வாறாக மாவட்டத்தில் வைரஸ் தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.
கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு 60 -க்கு கீழ் குறைய தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து 4-வது நாளாக தினசரி பாதிப்பு குறைந்துள்ளது. சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் வைரசால் பார்த்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 704 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் வைரஸ் பாதிப்பிலிருந்து தொடர்ந்து குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒரே நாளில் 104 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 11ஆயிரத்து 50 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 518 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 136 பேர் பலியாகி உள்ளனர். மாவட்டத்தில் வைரஸ் பாதிப்பு சற்று குறைந்து வருவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.