17/Nov/2020 11:18:14
புதுக்கோட்டை: புதுக்கோட்டை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை பாராட்டி இதுபோல் நடந்தால்தான் காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இருக்கும் என கூறி கலகலப்பை ஏற்படுத்திச் சென்றார் சிவகங்கை மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்.
புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்தின் சார்பில் புதுக்கோட்டை காங்கிரஸ் கட்சி அலுவலத்தில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமையில் ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட ஒன்றிய மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது கட்சியின் மூத்த நிர்வாகி களும் முன்னாள் மாவட்டத் தலைவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கட்சி அலுவலகத்திற்குள் இருந்த மூத்த நிர்வாகிகள் அங்கிருந்து வெளியேறினர். இதைப்பார்த்த பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு முயன்ற பொழுது காங்கிரஸ் நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தின் கதவை இழுத்துப் பூட்டியதுடன் பத்திரிக்கையாளர்களிடம் வாக்குவாதத்திலும் நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆலோசனைக் கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியேறிய சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் கட்சியில் இதுபோன்று சலசலப்பு இருப்பதால்தான் காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் உயிரோட்டத்துடன் இருப்பதாக அர்த்தம் என்று பாராட்டுத்தெரிவித்து கலகலப்பை ஏற்படுத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.