logo
கட்சியின் செல்வாக்கு  குறித்த சரியான புள்ளி விவரங்களுடன்தான்  காங்கிரஸ் கட்சி  திமுகவுடன் கூட்டணி பேச்சு நடத்தும்: கார்த்தி சிதம்பரம்

கட்சியின் செல்வாக்கு குறித்த சரியான புள்ளி விவரங்களுடன்தான் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி பேச்சு நடத்தும்: கார்த்தி சிதம்பரம்

17/Nov/2020 02:43:54

புதுக்கோட்டை:  234  தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு குறித்து சர்வே  எடுத்த  புள்ளி விவரங்களுடன்தான் திமுகவுடன் கூட்டணி பேச்சு நடத்தப்படும் என்றார் சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம்.

புதுக்கோட்டையில் இன்று(17.11.2020) நடைபெற்ற வட்டார காங்கிரஸ் நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

கூட்டணியில்  எண்ணிக்கைக்காக பேரம் கிடையாது. தொகுதியில் செல்வாக்கு, கள நிலவரம், வேட்பாளர் பலம், வாக்குவங்கி போன்ற அம்சங்களின் அடிப்படையில்தான்  முடிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையை வைத்து கிடையாது. திமுக கட்சி எப்படி தமிழகம் முழுவதும் சர்வே எடுக்கிறதோ அதே போல காங்கிரஸ் கட்சியும் ஒரு நிறுவனத்தைக் கொண்டு  234 தொகுதிகளிலும் சர்வே எடுத்து அந்த புள்ளி விவரங்களுடன் தான் கூட்டணி பேச்சு நடைபெறும்.

அரை நூற்றாண்டுகள்  இந்தியாவை ஆண்ட  காங்கிரஸ் கட்சி 2014 -  மக்களவை தேர்தலில்  44 இடங்களிலும், 2019  தேர்தலில்  52 இடங்களில் மட்டுமே  வென்றது. தற்போது நடந்து முடிந்த பீகார் தேர்தல் முடிவுகளை வைத்து  தமிழகத்தில் எதையும் தீர்மானிக்க முடியாது. காரணம், பீகார் மாநிலம் வேறு தமிழகம் வேறு. இங்குள்ள கள நிலை தனி. 

2014 -   தேர்தலில் காங்கிரஸும் திமுகவும் தனித்து தேர்தலை சந்தித்தன. அதில் தோல்வி கிடைத்தது. ஆனால் 2019 -இல் திமுகவும் காங்கிரஸும் இணைந்து போட்டியிட்ட போது 39 -க்கு 38- தொகுதியில் வெற்றி பெற்றது. காரணம் கூட்டணி பலம். இதில் என்னால் தான் வெற்றி உன்னால்தான் வெற்றி என்றெல்லாம் கிடையாது.  காங்கிரஸுக்கு  எங்கு பலம் இருக்கிறதோ அதை கேட்டுப்  பெறுவோம். தனி நபர்களுக்கு சில வருத்தம் இருப்பதை சரி செய்வோம்.  பாராளுமன்றத்தில் நான்  திமுகவும் இணைந்துதான்  செயல்படுகிறேன். 

அந்தந்த மாநிலத்தலைமைக்கும் மாவட்ட தலைவர்களுக்கும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். ஒரே இடத்தில் அதிகாரம் குவியக்கூடாது. காங்கிரஸ் தலைமை கேரள மாநில மாதிரியை பின்பற்ற வேண்டும். அங்கு அவர்கள்தான் முடிவு எடுப்பார்கள். அதே பாணியில்தான் தமிழகத்திலும் அதிகாரம்  தரப்பட வேண்டும். 7 பேர்  விடுதலை விவகாரத்தில் திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாலேயே கூட்டணி முறிந்துவிடாது.

தமிழகத்தைப் பொறுத்தவரை  மதசார்பின்மை, இந்துத்துவா, ஊழலில் திளைத்திருக்கும்  அதிமுக ஆட்சியை அகற்றுவது ஹிந்தி திணிப்பு  எதிர்ப்பு ஆகிய பரந்துபட்ட கொள்கைகளில் ஒன்றிணைந்து நிற்போம். காலச்சக்கரம் மாறும்.  அடுத்த தேர்தலில் திமுக வெற்றி பெறும். அடுத்த பாராளுமன்றத்தேர்தல் எப்படி இருக்கும் என்று தெரியாது. மக்களின் ஆதரவு  காங்கிரஸ் பக்கம் திரும்பும்.

2 முறை மக்களவைத் தேர்தலில்  தோல்வியடைந்ததற்காக  அகில இந்திய காங்கிரஸ் தலைமை மாற்றம் குறித்தும் , தலைமைப்பதவி  ஒரு குடும்பத்தைச் சுற்றியே வருவதாக ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.   நாட்டுக்காக தியாகம் செய்த குடும்பத்தைச்சுற்றி கட்சிப்பதவி இருப்பது என்பது  இயல்பானது. தலைமை மாற வேண்டும் என்றால் அதையும் காங்கிரஸார்தான்  முடிவு செய்வார்கள். ஆனால், இதே கேள்வியை  திமுகவிடமோ பாமகவிடமோ யாரும் கேட்பதில்லை. மேலும், காஷ்மீர், பஞ்சாப், மகாராஷ்டிரம், ஆந்திரா, பீகார், தெலங்கானா  போன்ற மாநிலங்களில் உள்ள முக்கிய கட்சிகளைப் பார்த்தும் இந்தக் கேள்வியை கேட்பதில்லையே ஏன்?. 

தமிழகத்தின் புகழ் பெற்ற பல்கலைக்கழகத்துக்கு வெளிமாநிலத்தைச் சேர்ந்தவரை துணை வேந்தராக நியமித்தது ஏன் என்ற கேள்விக்கே அதிமுக விளக்கம் சொல்லவில்லை. உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் தலைமைப் பொறுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த கல்வியாளர்கள் இருக்கும் போது,  அண்ணா பல்கலைக்கழக துணை  வேந்தர் பதவிக்கு  தகுதியான தமிழர்கள் எவருமே இல்லையா ?

 அமித்ஷா தமிழகம் வருவதால்  அரசியல் கட்சிகளுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது என்று பாஜக மாநிலத்தலைவர் எஸ். முருகன் கூறுவது  வேடிக்கையானது.   அவர்  என்ன சர்வாதிகாரியா? நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு  உள்துறை அமைச்சர் தமிழகம் வருவது சாதாரண நிகழ்வு. அப்படிப்பார்த்தால் எனது தந்தை ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது  வீட்டு வந்தால் நான் பயந்தேனா.. தமிழக மக்களோ, ஊடகத்துரையினரோ, தொகுதிமக்களோ யார் பயந்தார்கள். இப்போது அமித்ஷாவுக்கு ஏன் பயப்படப் போகிறார்கள்.  

புதுக்கோட்டையில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைப்பது குறித்து  இத்தொகுதி  எம்பி. திருநாவுக்கரசரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன். மத்திய அமைச்சரிடமும் இதுகுறித்து பேசுவேன். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருடன் பேசுவேன் என்றார் கார்த்தி ப. சிதம்பரம்.

Top