16/Nov/2020 10:07:00
மதுரை: தமிழகம் வருகை தரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி சந்திக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மதுரையில் நவம்பர் 20-ந் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாராம் அழகிரி.
தமிழக சட்டசபை தேர்தல் களத்தை அமித்ஷாவின் தமிழகம் வருகை செய்தி பரபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது. அண்மைக்காலமாக மவுனமாக இருந்த மு.க. அழகிரி இப்போது மீண்டும் அரசியல் களத்தில் இறங்கி உள்ளார். வழக்கம் போல திமுகவை வறுத்தெடுத்து பேட்டி கொடுத்தார் மு.க. அழகிரி. மேலும் தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் மு.க. அழகிரி கூறினார். அழகிரியின் இந்த பேட்டி திமுகவினரை அதிர வைத்திருக்கிறது.
இந்த நிலையில் சென்னை வருகை தரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க மு.க. அழகிரி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்னதாக தமது ஆதரவாளர்களுடன் நவம்பர் 20-ந் தேதி மதுரையில் அழகிரி ஆலோசனை நடத்த உள்ளார். தீபாவளி வாழ்த்துக்காக முக்கிய நிர்வாகிகளுக்கு போன்போட்டு பேசிய அழகிரி மதுரை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவும் அழைத்து இருக்கிறார்.
இது தொடர்பாக அஞ்சா நெஞ்சன் அழகிரி பேரவையின் நிர்வாகிகளிடம் பேசியபோது, அழகிரி தங்களை ஆலோசனை கூட்டத்துக்கு அழைத்திருக்கிறார்.. அங்கே போனால்தான் அண்ணன் என்ன முடிவில் இருக்கிறார் என தெரியும். எங்களிடம் பேசியவரை கலைஞர் திமுக என்ற தனிக்கட்சி தொடங்கும் முடிவில்தான் அண்ணன் உறுதியாக இருப்பதாக தெரிகிறது என்கின்றனர் பட்டும்படாமல் நமட்டுச் சிரிப்புடன்.
திமுக, அதிமுகவின் வாக்கு வங்கிகளைப் பிரிக்க அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகியவை களத்தில் இருக்கின்றன.