logo
கார்த்திகை மாதப் பிறப்பு: ஈரோட்டில்  மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்

கார்த்திகை மாதப் பிறப்பு: ஈரோட்டில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்

16/Nov/2020 05:16:11

ஈரோடு:கேரளம் மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி செல்வது வழக்கம். தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் தொடங்கும் இந்த விரதத்தை ஒரு மண்டலம்(48 நாள்)  இருந்து  மகர ஜோதியைக் காணும் நாளில் நிறைவு செய்வார்கள். 

அதுவரை மாலை அணியும் பக்தர்கள் தினமும் காலை, மாலை வேளைகளில் குளித்து, விரதம் மேற்கொண்டு, அய்யப்பனை வழிபடுவர். இந்நிலையில், இன்று கார்த்திகை மாதம் 1-ஆம் தேதியையொட்டி ஈரோட்டில் இருந்து சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் இன்று அதிகாலை குளிர்ந்த நீர் நீராடி கோயிலில் துளசி மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர். 

ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள ஸ்ரீ அய்யப்பா சேவா நிறுவனத்தின்  அய்யப்பன் கோயிலில் இன்று(16.11.2020) அதிகாலை முதலே அய்யப்ப பக்தர்கள், கோயில் குருசாமி முன்னிலையில் சரண முழக்கத்துடன் மாலை அணிந்து, அய்யப்பனை வழிபட்டு சென்றனர். 

இதில், ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாலை அணிந்தனர். இதேபோல், ஈரோடு பவானி, கோபி, சத்தி, பெருந்துறை, கொடுமுடி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.


Top