logo
ஈரோட்டில் தொழிற்சாலைகள் தலைமை ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

ஈரோட்டில் தொழிற்சாலைகள் தலைமை ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

12/Nov/2020 10:01:55

ஈரோடு:  ஈரோட்டில் தொழிற்சாலைகள் துணை தலைமை ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

ஈரோடு எஸ்.கே.சி. சாலை  கந்தப்பா வீதியில் தனியாருக்கு சொந்தமான குடியிருப்பில், மாவட்ட தொழிற்சாலைகள் துணை தலைமை ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. துணை தலைமை ஆய்வாளராக வேல்முருகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இதே அலுவலகத்தில் தொழிற்சாலைகள் துணை இயக்குநர் சந்திரமோகன், இணை இயக்குநர் அமர்நாத் ஆகியோரின் அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.

 இந்த அலுவலகத்தில், தொழிற்சாலைகள் உரிமம் பெறுவதற்கும், தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்கள் பாதுகாப்பானதாக என்பதையும் ஆய்வு செய்து உரிம சான்று வழங்குவது முக்கிய பணியாகும். இந்நிலையில், துணை தலைமை ஆய்வாளர் மற்றும் அவருக்கு கீழ் இருக்கும் அதிகாரிகள் தொழிற்சாலைகள் உரிமம் பெறுவதற்கும், உரிமைத்தை புதுப்பிக்கவும் லஞ்சம் கேட்பதாக தொடர் புகார்கள் வந்தன.

 மேலும், தீபாவளி நன்கொடையும் அதிகளவில் கேட்டு வருவதாக தொழிற்சாலை உரிமையாளர்கள் சிலர் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி திவ்யா தலைமையில், இன்ஸ்பெக்டர் ரேகா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட போலீஸார் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் துணை தலைமை ஆய்வாளர் அலுவலகத்தில் 12.11.2020 இரவு திடீர் சோதனை நடத்தினர். 

அப்போது, அலுவலகத்தில் இருந்த ஆய்வாளர் வேல்முருகன், துணை இயக்குநர் சந்திரமோகனை பிடித்து விசாரணை நடத்தினர். அலுவலகத்தில் இருந்த பணத்தை கைப்பற்றி அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும், அதிகாரிகளின், காரில் போலீசார் சோதனை செய்தபோது, அதில் தொழிற்சாலைகளில் இருந்து பெறப்பட்ட நன்கொடை குறித்த விவரம் அடங்கிய டைரி, பரிசு பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Top