logo
ஈரோட்டில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம்  ரூ.45 -க்கு வெங்காயம் விற்பனை:ஆட்சியர் - எம்எல்ஏக்கள் தொடங்கி வைப்பு

ஈரோட்டில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் ரூ.45 -க்கு வெங்காயம் விற்பனை:ஆட்சியர் - எம்எல்ஏக்கள் தொடங்கி வைப்பு

29/Oct/2020 08:52:44

ஈரோடு: வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக தமிழகத்தில் வெங்காய வரத்து குறைந்த அளவில் வரத் தொடங்கியது. இதன் காரணமாக பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ. 130 வரை விற்பனையானது.

 ஈரோடு மாவட்டத்திலும் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையானது.இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசுபண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் மானிய விலையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ 45 -க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவித்தது.

அதன்படி, ஈரோடு பண்ணை பசுமை நுகர்வோர் கடை மூலம் மானிய விலையில் கிலோ ரூ.45 -க்கு விற்பனை செய்யும் திட்டத்தை ஆட்சிர் சி. கதிரவன், எம்எல்ஏக்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு ஆகியோர்  இன்று தொடங்கி வைத்தனர்.

முதற்கட்டமாக ஒரு நபருக்கு ஒரு கிலோ வெங்காயம் மட்டும்தான் வழங்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து நாளை முதல் உழவர் சந்தை, அதைத் தொடர்ந்து படிப்படியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மானிய விலையில் கிலோ ரூ 45 -க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் சூரம்பட்டி ஜெகதீஷ், பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, முருக சேகர், அண்ணா தொழிற்சங்க மாதையன், அரசு வழக்கறிஞர் துரை சக்திவேல், ஒன்றிய செயலாளர் பூவேந்திர குமார், மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஆட்சியர் சி. கதிரவன் செய்தியாளர்களிடம்   கூறியதாவது: மானிய விலையில் கிலோ ரூ 45 -க்கு பெரிய வெங்காயம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் பண்ணை பசுமை நுகர்வோர் கடை மூலம் பெரிய வெங்காயம் கிலோ ரூ 45 -க்கு விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது மாவட்டத்தில் 5 டன் பெரிய வெங்காயம் வரத்து ஆகியுள்ளது. முதற்கட்ட மாக ஒரு நபருக்கு ஒரு கிலோ வெங்காயம் வழங்கப்படும் பின்னர் படிப்படியாக அவை அதிகரிக்கப்படும். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை வெங்காயம் பதுக்கல் எதுவும் நடைபெறவில்லை. வரத்து குறைவானதால் கடைகளில் கிலோ ரூ 80 -க்கு விற்பனை செய்து வருகிறது.பதுக்கல் சம்பந்தமாக புகார் வந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் தேவையான அளவு யூரியா கைவசம் உள்ளது என்றார். 


Top