logo
 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கிய   அமைச்சர் சி. விஜயபாஸ்கர்

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கிய அமைச்சர் சி. விஜயபாஸ்கர்

03/Jan/2021 11:25:35

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்  ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கிய சுகாதாரத்துறை  அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேசியதாவது:

 பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொதுமக்கள் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கும் சான்றுகளை உடனுக்குடன் ஆய்வு செய்து வழங்கும் வகையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது..

அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில்  ஏற்கனவே வழங்கப்பட்ட மடிக்கணினிகளுக்கு பதிலாக 172 மடிக்கணினிகளும் மற்றும் 89 புதிய மடிக்கணினிகளும் வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, வாரிசு சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பொது மக்களுக்கு விரைவாக வழங்க முடியும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலின் போது கடினமான சூழ்நிலையிலும்மிக சிறப்பாக பணியாற்றிய  கிராம நிர்வாக அலுவலர்கள் பாராட்டுக்குரியவர்கள். அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்று சேருவதில் கிராம நிர்வாக அலுவலர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.

மேலும் தங்களது பகுதிகளில் உள்ள பொதுமக்களில் தகுதியுள்ள பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவித் தொகை உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள தவறாமல் சென்று சேருவதை கிராம நிர்வாக அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ஜெயலெட்சுமி, வருவாய் கோட்டாட்சியர்கள் தண்டாயுதபாணி, டெய்சிக்குமார், முருகேசன் உள்ளிட்டோர்   கலந்து கொண்டனர்.


Top