logo
ஒகேனக்கல்லில் 7 மாதத்துக்கு பின் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: பரிசல் சவாரி செய்து உற்சாகம்

ஒகேனக்கல்லில் 7 மாதத்துக்கு பின் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: பரிசல் சவாரி செய்து உற்சாகம்

26/Oct/2020 09:44:09

கொரோனா ஊரடங்கால் தடை விதிக்கப்பட்டிருந்த  நிலையில், 7 மாதங்களுக்கு பின் நேற்று ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர். 

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, கடந்த மார்ச் மாதம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள பரிசல் தொழிலாளர்கள், மசாஜ் தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தனர். வருமானம் இல்லாததால் குடும்பத்துடன் சிரமப்பட்டு வந்தனர்.

அரசின் நிவாரணம் எதுவும் கிடைக்காத நிலையில், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் மலர்விழி, நேரில் ஆய்வு செய்து, ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

 இதையடுத்து, விடுமுறை தினமான நேற்று தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள், ஒகேனக்கல்லுக்கு வந்தனர்.அவர்கள் குடும்பத்துடன் காவிரியாற்றில் பரிசல் சவாரி செய்தும், ஆயில் மசாஜ் செய்து கொண்டு, அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர்.

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த நிலையில், 7 மாதங்களுக்கு பிறகு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதால், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், அங்குள்ள மசாஜ் தொழிலாளர்கள், சமையல் செய்பவர்கள் மற்றும் பரிசல் ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


Top