logo
ரூ.2 லட்சம் மதிப்பிலான வாழைத்தார்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய விவசாயி

ரூ.2 லட்சம் மதிப்பிலான வாழைத்தார்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய விவசாயி

24/Apr/2020 12:39:46

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மழையூரில் தனது தோட்டத்தில் விளைந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான வாழைத்தார்களை தூய்மை பணியாளர்கள் மற்றும் அப்பகுதி ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கி நெழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் அப்பகுதி விவசாயிகள் ஒருவர்.

ஆலங்குடி அருகேயுள்ள மழையூர் பகுதியை  சேர்ந்தவர் விவசாயி மயில்வாகனன்.இவர் தனது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 1500-க்கும் மேற்பட்ட வாழை மரங்களில் வாழைத்தார்கள் அறுவடைக்கு தயாரானது. இதற்காக மயில்வாகனன் சுமார் ரூ.1 லட்சம் வரையில் செலவிட்டுள்ளார்.
கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வாழைத்தார்களை விற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், வாழைத்தார்கள் தோட்டத்திலே பழுத்து வீணாகும் பரிதாப நிலை ஏற்பட்டது. இதைப் பார்த்து வேதனையடைந்த அவர், வாழைத்தார்களை ஏழை மக்களுக்கு வழங்க முடிவு செய்து, அப்பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்கள், ஏழை மக்களுக்கு வாழைத்தார்களை இலவசமாக வழங்கி வருகிறார். அவரின் இந்த செயலை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
இது குறித்து மயில்வாகனன் கூறியது: வாழைகளை உற்பத்தி செய்ய ரூ.1 லட்சம் வரை செலவு செய்துள்ளேன். தற்போது, ரூ.2 லட்சத்திற்கு விற்பனையாகும் அளவுக்கு வாழைத்தார்கள் விளைந்துள்ளன. ஆனால், ஊரடங்கு காரணமாக வாழைத்தார்களை விற்க வழியில்லை. அதனால், வாழைத்தார்கள் தோட்டத்திலே அழுகி கொட்டுவதை பார்க்கும் போது, மனம் வேதனையாக இருந்தது. அதனால், அவற்றை எல்லாம் ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வருகிறேன்.அது எனக்கு மனமகிழ்வை தருகிறது என்றார் அவர்.

Top