logo
 புதுக்கோட்டை அருகே வம்பனில் உலக நன்மைக்காக  மஹா சண்டி யாகம்

புதுக்கோட்டை அருகே வம்பனில் உலக நன்மைக்காக மஹா சண்டி யாகம்

25/Oct/2020 11:37:21

புதுக்கோட்டை அருகிலுள்ள வம்பன் அமிர்தானந்தஜீ சுவாமிகள்  குடிலில்   உலக நன்மைக்காகவும் துர்காஅஷ்டமி  முன்னிட்டும் மஹா சண்டி யாகம் ஸ்ரீ அமிர்தானந்தஜீ சுவாமிகள் அருளாசிகளுடன் வெகுசிறப்பாக நடைபெற்றது.

இதில் மங்கள இசையுடன் கோ பூஜை, கணபதி பூஜை,  புண்யாஹ வாசனம், 64 யோகினி பைரவர் பலி பூஜை, யாகசாலை பூஜை, கலச ஆவாஹனம், பாராயணம், கன்யா பூஜை, பிரஹ்ம்மசாரி பூஜை, தம்பதி பூஜை, சுஹாசினி பூஜை நடைபெற்றது.

இந்த யாகத்தில் நெய், தேன், மூலிகைகள், பூசணிக்காய், சமித்துகள், புஷ்பங்கள், பழங்கள், நிவேதன பொருட்கள், பட்டு வஸ்திரங்கள், மாங்கல்யம், கொலுசு, மெட்டி போன்ற சௌபாக்ய பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டு மங்கள சண்டி யாகம் மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ காலராத்திரிஅம்மபாளுக்குபால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி போன்ற பஞ்ச திரவியா அபிஷேகத்துடன் கலசாபிஷேகம் நடைபெற்றது.  

 மஹா சண்டி யாகம் பற்றி சந்தோஷ்சிவச்சாரியார் கூரியதாவது: ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் தன்னுள்ளே அடக்கி உலகத்தை படைத்தவளே அன்னை ஆதிபராசக்தி. அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கும் இவ்வுலகத்தை காப்பாற்றி, இயற்கையின் சீற்றத்தை தனித்து, மழை பெய்து, மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும், அமைதியோடும் என்றென்றும் வாழ அன்னை ஆதிபராசக்தியை வேண்டி நடத்தப்படும் யாகமே சண்டி மஹா யாகமாகும்.

 நவக்கிரக தோஷங்கள், நிலம், பூமி, வீடு மனை மற்றும் சொத்து தகராறு, வழக்குகள், பூர்வஜென்ம தோஷம், கன்யா தோஷம், பித்ரு தோஷம் இதனால் ஏற்படும் திருமணத்தடை, மன அமைதி குறைவு, மனசோர்வு, திருஷ்டி, செய்வினை, துஷ்ட சக்தி தோஷங்கள் மற்றும் நாக தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகள், கருத்து வேறுபாடு, கடன் தொல்லை,  பதவி உயர்வு, குழந்தைகள் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரம் இவையனைத்திலும் ஏற்படும் தடைகளுக்கு இந்த மஹாயாகத்தில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து தடைகள் நீங்கி சண்டிகா தேவியின் அருள் பெற்று சகல ஐஸ்வர்யங்களுடன், ஆரோக்யத்துடன் வாழ பிரார்த்திக்கின்றோம் என்றார்.

பக்தர்கள் அனைவருக்கும் ஸ்ரீ அமிர்தானந்தஜீ சுவாமிகள் அருளாசி வழங்கினார். நிகழ்வில் புதுகோட்டை தொழிலதிபர் ஏவிஎம். ராமையா,ஜோதிடர் செல்வராஜ், சுந்தரம்சிவனடியார் மற்றும் ஈரோடு அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மகளிர் அணித்தலைவி கல்பனா, மன்னை வழக்குரைஞர் ரமேஷ், திருச்சி, புதுச்சேரி, ஆலங்குடி உள்பட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த  பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.   


Top