logo
ஆயுத பூஜை விற்பனை ஈரோடு கடை வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

ஆயுத பூஜை விற்பனை ஈரோடு கடை வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

24/Oct/2020 01:55:51

ஈரோடு: ஆயுத பூஜையையொட்டி இன்று(24.10.2020) கடைவீதிகளில் பூஜை பொருட்கள், பொரி, பழங்கள் விற்பனை செய்யும் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நாடு முழுவதும் ஆயுத பூஜை பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, அனைத்து விதமான அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் வாகனங்கள் போன்றவற்றை சுத்தம் செய்து, பூஜை செய்து வழிபாடு நடத்தப்படும். ஆயுத பூஜையையொட்டி ஈரோட்டில் பூஜை பொருட்களை விற்பனை செய்வதற்காக ஆர்கேவி சாலை.

நேதாஜி தினசரி மார்க்கெட், சின்ன மார்க்கெட், கொங்காலம்மன் கோவில் வீதி, சத்தி சாலை, ஈஸ்வரன் கோயில் வீதி, மணிக்கூண்டு, பெரியமாரியம்மன் கோயில் பஸ் ஸ்டாப் போன்ற பகுதிகளில் வியாபாரிகள்  சாலையோரங்களில்  தற்காலிக கடைகள்  அமைத்து,  தேங்காய், வாழைப்பழம், பழங்கள், பூ மாலை, வாழைக்கன்று, திருஷ்டி பூசணிக்காய், பொரி, கடலை உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் விற்பனை செய்தனர். 

 பூஜை பொருட்களை வாங்க ஈரோடு கடை வீதிகளில் இன்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. பொருட்களை வாங்கும் பொதுமக்கள் வாகனங்கள் ஆங்காங்கே சாலையோரம்  நிறுத்தியிருந்ததால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. ஆயுதபூஜையையொட்டி அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் நாளை விடுமுறை என்பதால், இன்றே சுத்தம் செய்து பூஜைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததிருந்ததைப் பார்க்க முடிந்தது.

Top