logo
கறம்பக்குடி பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.

கறம்பக்குடி பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.

23/Oct/2020 10:04:47

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களை பல்வேறு வகையில் வஞ்சிப்பதாக கூறி தொழிலாளர்கள் வியாழக்கிழமை(22.10.2020) பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கறம்பக்குடி பேரூராட்சியில் 13 நிரந்தரத் தொழிலாளர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தில் 50 சதவீத அளவுக்கு பேரூராட்சி நிர்வாகமே பிடித்து வைத்துக்கொள்வதாகவும் ஊதியப் பட்டியலைக் கேட்கும் நபர்களுக்கு வேலை வழங்க மறுப்பதாகவும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அதிகாரிகள் தொழிலாளர்களை ஒருமையில் பேசி தரக்குறைவாக நடத்துவதாகவும், கூடுதல் நேரம் ஒதுக்கி பழிவாங்குவதாகவும் கூறப்படுகிறது.

அதிகாரிகளின் இத்தகைய தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்து துப்புரவுத் தொழிலாளர்கள் அனைவரும் வியாழக்கிழமை பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் கே.முகமதலிஜின்னா, செயலாளர் ஏ.ஸ்ரீதர்,  கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சி.அன்புமணவாளன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் த.அன்பழகன், சிஐடியு நிர்வாகி பழனிவேல்  உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து தொழிலாளர்களிடையே உரையாற்றினர். 


Top