logo
வீடு தேடி புகார்கள் விசாரிக்கும் திட்டத்தில் 280 மனுக்களில் உடனடி தீர்வு: ஈரோடு எஸ்.பி  தகவல்

வீடு தேடி புகார்கள் விசாரிக்கும் திட்டத்தில் 280 மனுக்களில் உடனடி தீர்வு: ஈரோடு எஸ்.பி தகவல்

22/Oct/2020 11:10:22

ஈரோடு: தமிழகத்தில் பொதுமக்கள் தங்களது குடும்ப பிரச்னை, பல்வேறு தனி நபர், சமூக பிரச்னைக்கு போலீஸ் நிலையத்திற்கும், போலீஸ் உயரதிகாரி அலுவலகங்களிலும் புகார் மனு அளித்து, நடவடிக்கைக்காக காத்திருப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது. இந்த நடைமுறையை, புகார்தாரர் புகார் அளித்த அடுத்த நாளே இருப்பிடத்திற்கே சென்று விசாரிக்க வேண்டும். இதன் மூலம் புகார் மனுக்களின் தன்மையை போலீஸ் அதிகாரிகள் நேரில் உணர்ந்து பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணலாம் என கூடுதல் டி.ஜி.பி. உத்தரவிட்டு இருந்தார்.

 இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6-ஆம் தேதி முதல் வீடு தேடி புகார் மனுக்கள் விசாரிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள 5  காவல் உள்கோட்டங்களின்  கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்கள், எஸ்.பி, அலுவலகத்துக்கு வந்துள்ள புகார் மனுக்கள் மீது புகார்தாரர் இருப்பிடத்திற்கே சென்று போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், கடந்த 16 நாட்களில் மாவட்டம் முழுவதும் 300 புகார் மனுக்கள் பெறப்பட்டு, அதில் 280 மனுக்களின் மீது உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு எஸ்.பி .தங்கதுரை கூறியதாவது

வீடு தேடி புகார் மனுக்கள் விசாரிக்கும் திட்டத்தின் மூலம் தற்போது வரை 300 மனுக்கள் பெறப்பட்டு, அதில், 150 மனுக்களின் மீது இன்ஸ்பெக்டர்,  சப்-இன்ஸ்பெக்டர்கள் நேரடியாக சென்று புகார்தாரர் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட நபர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு கண்டனர். 40 க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு எஸ்பி என்ற முறையில் நானும், ஏடிஎஸ்பி.,யும் விசாரணை நடத்தி தீர்வு வழங்கினோம். 

இவ்வாறாக 300 மனுக்களில் 280 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள  வழக்கு சிவில் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளாக இருப்பதால் உடனடி தீர்வு வழங்க முடியவில்லை. அதற்கு சட்ட ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அறிவுரை வழங்கினோம். தொடர்ந்து இத்திட்டத்தின் மூலம் போலீசார் புகார்தாரரின் இருப்பிடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார். 

  

Top