logo
ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வரும் கொரோனா  பாதிப்பு- 300 பேர் வீடுகளில் சிகிச்சை

ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு- 300 பேர் வீடுகளில் சிகிச்சை

21/Oct/2020 05:23:09

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்தது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் வயது பேதமின்றி தாக்கி வந்தது. இதைப்போல் முன் களப்பணியாளர்களான போலீஸார், டாக்டர்கள், செவிலியர்கள், அரசு உயர் அதிகாரிகள் என எவரையும்  கொரோனா விட்டு வைக்கவில்லை.

 இதனால்,  மாவட்டத்தில் வைரசால்  வைத்தவர்கள்  எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது. இதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வந்தது. தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள், காய்ச்சல் இருமல் கண்டறியும் முகாம்கள், மாவட்டம் முழுவதும் பரிசோதனை நிலையங்கள், ஸ்கிரீனிங் மையங்கள், வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சையளித்து வந்தது.

இதுபோன்ற காரணங்களால் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக  வைரஸால்  பாதித்தவர்கள்  எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதே நேரத்தில் தினமும் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

நேற்று மாலை சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 9,790 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் வைரஸ் பாதிப்பிலிருந்து 134 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர்  எண்ணிக்கை 8,246 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 931 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரைக்கும் 113 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் ஈரோடு மாநகராட்சி பகுதியில் தினம் பாதிப்பு  எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்நிலையில், தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. முதலில் தினமும் 70 பேர் வரை பாதிக்கப்பட்டு வந்தனர்.  தற்போது தினமும் 15 முதல் 20 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இதைப்போல் மாநகராட்சி பகுதியில் அறிகுறி இல்லாமல் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 தற்போது மாநகராட்சி பகுதியில் 300 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்தந்த பகுதியை சேர்ந்த நர்சுகள் அவர்களின் வீட்டுக்கு  தினமும் சென்று அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகின்றனர். இதுபோல் சுகாதாரத் துறை யினரும் தினமும் அவர்களின் வீட்டுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உடல்நிலை குறித்து கேட்டு அறிந்து வருகின்றனர். இது போன்ற காரணத்தால் வீடுகளில்  சிகிச்சை பெறுபவர்கள் ஒருவாரத்தில் குணம் அடைந்து விடுகின்றனர். 


Top