logo
7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்து கட்சிகளோடு இணைந்து போராட அதிமுக முன்வர வேண்டும்

7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்து கட்சிகளோடு இணைந்து போராட அதிமுக முன்வர வேண்டும்

21/Oct/2020 04:59:38

இது குறித்து கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கை:

மருத்துவப்படிப்பில்  7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் ஆளுநரை சந்தித்த அமைச்சர்களிடத்தில் எதையும் சொல்லாமல் அனுப்பி வைத்தது 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் ஆளுநரிடமிருந்து  ஒப்புதல் வருமா என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. மொத்த தமிழகமும் ஒருமித்த குரல் கொடுக்கும் போது ஆளுநர் தனி ஒருவராக தமிழர்களின் உணர்வை மதிக்காமல் இருக்க வாய்ப்பில்லை. மத்திய அரசினுடைய அனுமதிக்காக காத்திருப்பது போல தோன்றுகிறது.

 மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு நமக்கு ஆதரவாக இருக்க வாய்ப்பில்லை. இந்த விஷயத்தில் ஆளுநருடைய எதிர்ப்பு பாண்டிச்சேரியின் நிகழ்வுகளை நினைவுபடுத்துகிறது. சுய அதிகாரத்தோடு மாநில அரசுகள் எடுக்கின்ற எந்தவொரு முடிவுக்கும் மத்திய பாஜக அரசு ஒப்புதல் கொடுத்ததாக வரலாறு இல்லை. ஆளுநர் ஒப்புதல் கிடைக்கும் வரை மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்காது என்று தமிழக அரசு அறிவித்திருப்பது ஒருவகையில் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கின்ற நடவடிக்கைதான்.

ஆனாலும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக தமிழக அரசு இருக்குமா அல்லது மத்திய அரசின் அழுத்தத்திற்கு அடிபணியுமா என்ற விவாதம் தமிழக மக்களிடையே நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு மாநில அரசுக்கு இந்த விவகாரத்தில் அழுத்தம் கொடுப்பதற்கு முன்பாக தமிழக முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றிணைந்து அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்.

 தமிழக அரசோடு சேர்ந்து போராடுவதற்கு தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் அறிவித்த பின்னால் இன்னும் தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன். இந்த ஆண்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைக்காமல் போனால் தமிழக அரசின் மெத்தனப்போக்கு தான் அதற்கு காரணமாக அமையும். 

ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இந்த விஷயத்தில் என்ன கடிதப் போக்குவரத்துகள் நிகழ்கிறது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். நீட் தேர்வு விஷயத்தில் மத்திய அரசு கைவிரித்ததை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த போதுதான் மாநில அரசு அந்த கடிதப் போக்குவரத்தை மறைத்தது வெளியே தெரிந்தது. அந்த நிலைமை இப்போதும் நிகழ்ந்து விடக்கூடாது. 

தமிழக அரசோடும், எதிர்க்கட்சித் தலைவரோடும் இணைந்து இந்த விவகாரத்தில் போராடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அரசுப்பள்ளி மாணவர்கள் நம்பிக்கையான கனவோடு இருக்கிறார்கள். அவர்கள் ஒருவேளை ஏமாற்றப்பட்டால் அந்த ஏமாற்றத்தினால் நடக்கும் பாதிப்புகளுக்கு தமிழக அரசு காரணமாகி விடக்கூடாது.

Top