logo
மலேசியாவில் சிக்கி தவிக்கும் மகனை மீட்டுத் தரக் கோரி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் பெற்றோர்கள் புகார் மனு

மலேசியாவில் சிக்கி தவிக்கும் மகனை மீட்டுத் தரக் கோரி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் பெற்றோர்கள் புகார் மனு

10/Feb/2021 05:26:25

ஈரோடு, பிப்: உயிருக்கு பாதுகாப்பின்றி மலேசியாவில் சிக்கி தவிக்கும் மகனை மீட்டுத் தரக் கோரி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் பெற்றோர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

ஈரோடு, மோளக் கவுண்டன்பாளையம் காந்திபுரம், பாலதண்டாயுதம் தெருவை சேர்ந்தவர் உமா பாரதி. இவரது மனைவி நளினி (வயது 40). இவர்கள் இருவரும்  புதன்கிழமை  ஈரோடு எஸ். பி. அலுவலகத்திற்கு வந்து அளித்துள்ள புகார் மனுவிவரம்:

 ஈரோட்டில் உள்ள சாயப்பட்டறையில் நாங்கள்  கூலி வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு கவுதம் (22) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். எனது மகன் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளான்.

  அதன்பிறகு, வெல்டிங் பட்டறையில் வேலைக்குச்  சென்று வந்தான். இதில் சரியான  வருமானம், வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் வெளிநாட்டிற்கு சென்றால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று முடிவு செய்து அதற்கான முயற்சி மேற்கொண்டான்.

  இதையடுத்து வெளிநாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு ஆள் அனுப்பும் ஏஜெண்ட் ஆக உள்ள கோவையை சேர்ந்த  எனது கணவரின் உறவினர்  மூலம் கடந்த  2019-ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி மலேசியாவில் வெல்டிங் வேலைக்காக எனது மகன் சென்றான். மறுநாள் (ஜனவரி 1-ஆம் தேதி) மலேசியாவில் வந்துவிட்டதாக போன் மூலம் தெரிவித்தான்.  அதன்பிறகு கடந்த டிசம்பர் 2019 -ஆம் தேதி மற்றும் மார்ச் மாதம் ஆகிய இரண்டும் முறை உறவினர் மூலம் ரூ 25 ஆயிரம் பணம்  அனுப்பி வைத்தான்.


 கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு எங்களால் மகனுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. நாங்களும் பல முறை முயற்சி செய்தும் அவனை தொடர்பு கொண்டு பேச முடியவில்லை. இது குறித்து எனது கணவரின் உறவினர் கேட்டால் அவர் முறையாக பதிலளிக்கவில்லை. போன் செய்தாலும் எடுக்கவில்லை.

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு என் மகனிடம் இருந்து மற்றொரு எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய எனக்கு மகன் தனது செல்போன் பாஸ்போர்ட் எல்லாவற்றையும் ஒரு கும்பல் பறித்துக் கொண்டது என்றும் ஏழு எட்டு மாதங்களாக யாரிடமும் பேச அனுமதிக்கவில்லை என்றும் ஒரு காட்டில் தன்னை மறைத்து வைத்திருக்கிறார்கள் என்றும் என்னைக் காப்பாற்றுங்கள் என்றும் தெரிவித்தான்.


 இதையடுத்து அந்த போன் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு வேறு ஒரு எண்ணில் இருந்து போன் வந்தது அதில் பேசிய நபர் உங்கள் மகனை அனுப்ப வேண்டும் என்றால் ஒரு லட்சத்தி பத்தாயிரம் கொடுக்க  வேண்டும் என்று கூறினார்.  நாங்கள் அதற்கு எனது மகனை என்னிடம் பேசச் சொல்லுங்கள் நாங்கள் பணம் தர தயாராக இருக்கிறோம் என்று கூறினோம். ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார்.

இதையடுத்து என் மகன் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. எனது மகன் உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக நாங்கள் கருதுகிறோம் எனவே தயவு செய்து எனது மகனை  மலேசியாவிலிருந்து மீட்டு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அந்த மனுவில் கூறியுள்ளனர்

Top