logo
கிராம நிர்வாக அலுவலருக்கு லஞ்சம் கொடுக்க யாசகம் கேட்டு நூதனப் போராட்டம்

கிராம நிர்வாக அலுவலருக்கு லஞ்சம் கொடுக்க யாசகம் கேட்டு நூதனப் போராட்டம்

19/Oct/2020 11:14:32

அந்தியூர் அடுத்துள்ள மாத்தூர் கிராம நிர்வாக அதிகாரிக்கு வாரிசு சான்று தர லஞ்சம் வழங்குவதற்காக பணத்தை கொடுக்க அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டோர் யாசகம் கேட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டதால் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்துள்ள ஆலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி பிரியா கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் வாரிசு சான்று கேட்டு மாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ் என்பவரிடம் விண்ணப்பித்திருந்தனர்

 விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் ரூ.3000 லஞ்சம் கேட்டாராம்.தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க இயலாது என்று கூறியதைத் தொடர்ந்து கடந்த 8 மாதங்களாக ப்ரியாவின் மாமியார் ஜோதிமணி மற்றும் இரண்டு குழந்தைகளும் 50-க்கும் மேற்பட்ட முறை மாத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று வாரிசு சான்று நிலை குறித்து கேட்டு வந்துள்ளனர்

இந்நிலையில், பணம் கொடுத்தால் மட்டுமே வாரிசு சான்று வழங்க முடியும் என்று கிராம நிர்வாக அலுவலர் கூறியதைத் தொடர்ந்து, இறந்துபோன பிரியாவின் மாமியார் ஜோதிமணி மகள்கள் கனிகா, யோகா ஸ்ரீ ஆகியோர் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கையில் பதாகைகளை ஏந்தி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் மாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷுக்கு லஞ்சத்தொகை கொடுப்பதற்காக  பொதுமக்களிடம் யாசகம் கேட்டு தரையில் அமர்ந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாத்தூர் கிராம நிர்வாக அலுவலர்  அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் பொதுமக்கள் வட்டாச்சியரிடம் புகார் மனு கொடுத்தனர். கிராம நிர்வாக அலுவலருக்கு லஞ்சப்பணம் கொடுப்பதற்காக தாலூகா அலுவலகம் முன்பு அமர்ந்து யாசகம் கேட்ட நிகழ்வு  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


Top