logo
நலவாரியப் பயன்களை முழுமையாக வழங்கக்கோரி சிஐடியு தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டம்

நலவாரியப் பயன்களை முழுமையாக வழங்கக்கோரி சிஐடியு தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டம்

19/Oct/2020 05:26:53

புதுக்கோட்டை: முறைசாராத் தொழிலாளர்களுக்கான நலவாரியப் பயன்களை முழுமையாக வழங்கக்கோரி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை  உண்டு, உறங்கி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா கால  நிவாரண உதவித் தொகையாக கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணை உள்ளிட்ட உணவுப் பொருட்களும், இரண்டு மாதத்திற்கு தலா ரூ.1000-மும், தையல் உள்ளிட்ட இதர முறைசாராத் தொழிலாளர்களுக்கு ரூ.1000 மும் நிவாரணமாக வழங்கப்பட்டது. இந்த நிவாரணத் தொகை அனைத்து முறைசாராத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படவில்லை. முறையாக பதிவை புதுப்பித்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. பதிவை புதுப்பிக்காவிட்டாலும் அவர்களுக்கும் வழங்க வேண்டுமென அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், முறையாக பதிவை புதுப்பித்தவர்களில் பலருக்கும் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. எனவே, பதிவை புதுப்பித்துள்ள அனைவருக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணப் பொருட்களும், நிவாரணத் தொகையும் வழங்க வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் புதுக்கோட்டை தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பாக  உண்டு, உறங்கி காத்திருக்கும் போராட்டம் திங்கள்கிழமை  நடைபெற்றது.

போராட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் சி.அன்புமணவாளன், ரத்தினவேல், அழகப்பன், மாரிக்கண்ணு, சீனிவாசன், சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


Top