logo
ஈரோடு தீயணைப்பு துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

ஈரோடு தீயணைப்பு துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

17/Oct/2020 03:20:37

ஈரோடு: கொரோனா  நோயின் ஆபத்து குறித்தும், நோய்த் தாக்காமல் மேற்கொள்ள வேண்டிய நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் ஈரோடு தீயணைப்புத்துறை  சார்பில் இன்று விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. 

ஈரோடு காந்திஜி சாலையிலுள்ள தீயணைப்புத்துறை அலுவலக வளாகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியின் போது, கொரோனா வைரஸ் குறித்தும், நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள், நோய்த்தொற்று அறிகுறி இருந்தால் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகள், நோய்த்தொற்று பாதிப்புள்ளவர்கள் குறித்து தகவல் தெரிவித்திட வேண்டிய இலவச அழைப்பு எண்கள் ஆகியவை குறித்து விளக்கிக் கூறப்பட்டது. 

மேலும் முகக்கவசமின்றி வெளியேறுவது குற்றமென்பதால் அனைத்துத் தரப்பினரும் முக்கவசம் அணிந்தபடி வீடுகளை விட்டு வெளியேறிட வேண்டும், கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம், ஆர்சானிக் அமில ஹோமியாபதி மாத்திரைகள் மற்றும்  சத்து மாத்திரைகளை உட்கொண்டு நோய் வராமல் தடுக்கலாம்.

 நோய் எளிதில் தாக்கக் கூடிய சிறுவர்கள், 60 வயதிற்கு மேலானவர்கள், கர்ப்பினிப் பெண்களை அதிகம் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்வதை தவிர்த்திட வேண்டும், கோவில்கள்,நிகழ்ச்சிகள், வியாபார நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்திட வேண்டும் என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கை பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

 காந்திஜி சாலையில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி நகரின் முக்கிய வீதிகளில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் வழியாக சென்று மீண்டும் தீயணைப்புத்துறை அலுவலகத்தில் நிறைவடைந்தது. ஈரோடு தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர். 


Top