28/Oct/2020 04:29:01
ஈரோடு:தமிழகத்தில் உள்ள 12,525 பஞ்சாயத்துகளில் 66 ஆயிரத்து 130 பேர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தூய்மைப் காவலர்களாக பணி செய்கின்றனர்.இவர்களது ஊதியத்தை மாதம் 2,600 ரூபாயிலிருந்து 3,600 ரூபாயாகவும், டேங்க் ஆப்பரேட்டர் ஊதியம் 2,600 ரூபாயிலிருந்து 4 ஆயிரமாகவும்,உயர்த்தி சட்டசபையில் முதல்வர் உத்தரவிட்டும் இன்று வரை உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படவில்லை. இதை அமல்படுத்த கோரி ஏஐடியுசி சார்பில் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இன்று போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதை கைவிடக்கோரி, ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ கவிதா தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இன்று திட்டமிட்டபடி காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஏஐடியூசி மாநில தலைவரும், திருப்பூர் எம்பியுமான சுப்பராயன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. துணைத் தலைவர் சின்னசாமி முன்னிலை வகித்தார்.
இதில், சிறப்பு அழைப்பாளர்களாக ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, திமுக மாநகரச் செயலாளர் சுப்பிரமணி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி .ரவி, விடுதலை சிறுத்தை கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொறுப்பாளர் சுப்பு, குணசேகரன் மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் முக்கிய நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
முன்னதாக திருப்பூர் எம்பி சுப்பராயன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 527 ஊராட்சிகளில் தூங்கி பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.அவர்களது ஒரு நாள் சம்பளம் 83 ரூபாய்தான். இதை வைத்து எப்படி குடும்பம் நடத்த முடியும். இந்த 83 ரூபாய்யை வைத்து அமைச்சர்களால் ஒரு நாளை சமாளிக்க முடியுமா?தூய்மை பாதுகாவலர்கள் சுடுகாடு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் பணி புரிகின்றனர். தமிழக சட்டசபையில் இவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உயர்த்தி அறிவித்தனர்.அந்த அறிவிப்பு என்னவாச்சு. உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் இதற்கான அரசாணையை அரசுவெளியிட வேண்டும். இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தொடர்ந்து அடுத்தடுத்த கட்ட போராட்டங்கள் நடைபெறும். இதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கூறினார்.