logo
ஈரோட்டில் கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்ட 2  இளைஞர்கள் கைது

ஈரோட்டில் கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்ட 2 இளைஞர்கள் கைது

16/Oct/2020 09:27:26

ஈரோடு: கள்ள நோட்டுகள் தயாரித்து புழக்கத்தில் விட்ட 2 இலைஞர்களை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து  கார், பைக், கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு நாராயணவலசு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் சில்லிசிக்கன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு நேற்று முன்தினம் இரவு 2 இளைஞர்கள் வந்து 500 ரூபாய்த்தாளை  கொடுத்து சில்லி சிக்கன் வாங்கியுள்ளனர். அந்த இளைஞர்கள் கொடுத்த ரூபாய் நோட்டு மீது  சந்தேகமடைந்து கடையில் வேலை செய்து வரும் பாலு என்பவர் ஈரோடு வடக்கு போலீசில் புகார் செய்தார்.

 இது தொடர்பாக, இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்.ஐ.-க்கள் ஜெயபாரத், ஹபிபூர்ரகுமான், போலீஸார் விசாரணை நடத்தியதில், கள்ள நோட்டு கொடுத்தது ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த மாசானம் மகன் சதீஸ்(23), கோபால் மகன் சவுந்தர்ராஜன்(20) என்பதும் தெரியவந்தது. 

இதையடுத்து இருவரையும் நேற்று போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில், கைது செய்யப்பட்ட இருவரும் காரில் சென்று துணி வியாபாரம் செய்து வந்ததும், சமீபகாலமாக வியாபாரம் சரிவர இல்லாததால் செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வந்த நிலையில், யூ டியூப் மூலம் கள்ள நோட்டுகளை தயாரிப்பது எப்படி என்று பார்த்து ஜெராக்ஸ் மெஷின் மூலம் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து கள்ள நோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட்டதை இருவரும் ஒப்புக்கொண்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கலர் பிரிண்டர், கள்ள நோட்டுகள் ரூ.20,100, கள்ள நோட்டுகளை மாற்றுவதற்காக பயன்படுத்தப்பட்ட கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 


                                                                               


Top