logo
புதுக்கோட்டை அருகே திருமயத்தில் 40 ஆண்டுகளுக்குப்பின் தூர்வாரப்பட்ட தர்மக்கிணறுகள்..!

புதுக்கோட்டை அருகே திருமயத்தில் 40 ஆண்டுகளுக்குப்பின் தூர்வாரப்பட்ட தர்மக்கிணறுகள்..!

15/Oct/2020 01:17:28

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில்  பயன்பாடற்ற நிலையில் இருந்த தர்ம கிணறுகள் 40 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வரப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பல வரலாற்றுச்சிறப்புகளை உள்ளடக்கியது. இங்குள்ள குடைவரை கோயில்கள் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாதலங்களில் ஒன்றாகத்திகழ்கிறது. இந்நிலையில்,மக்கள் பயன்பாட்டில் இல்லாத பல அதிசயங்கள் அழியும் நிலையில் உள்ளது

திருமயத்தில்  மொத்தம் 12 தர்ம கிணறுகள் உள்ளன. இங்கு  பல மதத்தினரும், பல்வேறு சமுதாய மக்களும்  தனிதனித் தெருவில் வசிப்பதால் ஒவ்வொரு சமுதாய மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மன்னராட்சி நடந்த 1928- ஆம் ஆண்டுகளில் தெருவுக்கு தெரு தர்ம கிணறு அமைக்கப்பட்டது.  இதன் மூலம், திருமயம் கிராம மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது.

கால நிலை மாற்றத்தால் ஏற்பட்ட தொடர் வறட்சி காரணமாக கிணறுகள் நீரின்றி வறண்டு போனது. இதைச் சமாளிக்க  ஆழ்குழாய் கிணறுகளை தமிழ்நாடு அரசு குடிநீர் வாரியம் மூலம்  அமைத்து மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. இதனால், திருமயம் பகுதியில் இருந்த 12 தர்ம கிணறுகளிலும் மக்கள் நீர் எடுப்பதை நிறுத்திவிட்டனர்மக்கள் பயன்பாட்டில் இல்லாததால் கிணறுகள் குப்பை தொட்டிகளாக மாறியது. இதனால் வறண்டு போன கிணறுகளில் நீரின்றி குப்பைகளே நிறைந்து காணப்பட்டது.

 தற்போது கடும் வரட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையைப் போக்குவதற்காக  திருமயம் பாப்பாவயல், சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள 4 கிணறுகளை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் திருமயம் ஊராட்சிக்கு  கோரிக்கை விடுத்தனர்.

இதனை அடுத்து 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஊராட்சி பொது நிதியில் இருந்து தற்போது சுமார் 100 அடி ஆழத்திற்கு தூர்வாரி  கிணற்றை சுத்தம் செய்து வர்ணங்கள் பூசியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது அதுமட்டுமில்லாமல் கிணற்றில் எட்டும் தூரத்தில் தண்ணீர் நிரம்பிக்கிடப்பதால் பொதுமக்கள் அதிகமானோர் தங்கள் நீர்த்தேவையை இந்த கிணற்றின் மூலம் பூர்த்தி செய்து கொள்ளும்  நல்ல சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Top