logo
பாரம்பரிய ஓவியக் கலைகளை பாதுகாத்து வரும்  ஓவியக் கலைஞர்கள் அய்யப்பா-ராஜப்பா..

பாரம்பரிய ஓவியக் கலைகளை பாதுகாத்து வரும் ஓவியக் கலைஞர்கள் அய்யப்பா-ராஜப்பா..

14/Oct/2020 05:03:22

புதுக்கோட்டை: தமிழினம் உலகிற்கு வழங்கிய கொடைகளில் முக்கியமானவை நமது பாரம்பரிய கலைகள்தான். குறிப்பாக ஓவியக்கலையில் பலபு திய பரிமாணங்களை அறிமுகப்படுத்தி உலகிற்கு முன்னோடியாகவும் முன் மாதிரியாகவும் திகழ்ந்தவர்கள் தமிழர்கள்.

தமிழகத்தின் பெருமையினை உலக அளவில் பறைசாற்றும் பல்வேறு பாரம்பரிய கலைகளில் தஞ்சாவூர் ஓவியங்களுக்கு மிக முக்கிய இடமுண்டு. விலை உயர்ந்த கற்கள்,தங்கத்தகடு,பிரேம் போன்றவைகள் உபயோகப்படுத்தி தமிழர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்படும் தஞ்சாவூர் ஓவியங்களுக்கு உலக அளவில் தனி மதிப்பு உண்டுஇது மாதிரியான தஞ்சாவூர் ஓவியங்கள் வீட்டில் வைப்பது மங்களகரமான நிகழ்வு மட்டுமின்றி பாரம்பரிய அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

பல நூற்றாண்டுகள் கடந்தும் வரவேற்பு குறையாதது இந்த தஞ்சாவூர் ஓவியக்கலையாகும். இந்த அறிய கலைகளை உருவாக்கி பாதுகாத்து வருகின்றனர் புதுக்கோட்டையை சேர்ந்த ஓவியக்கலைஞர்கள் எம்.அய்யப்பா,   எம்.ராஜப்பா  சகோதரர்கள்

 சரபோஜி மன்னர் காலத்தில் குலத்தொழிலாகவே உருவான தஞ்சாவூர் ஓவியங்கள் வரைவதில் இவர்கள் கைதேர்ந்தவர்களாகத் திகழ்கின்றனர். ஆதி காலத்து ஓவியம் முதல் நவீன காலத்து ஓவியம் வரை  தத்ரூபமாக வரைந்து வருகின்றனர்வீடு முழுவதும் வண்ண வண்ண ஓவியங்களும் தஞ்சாவூர் ஓவியங்கள் கண்ணாடி ஓவியங்களும் காண்பவர்களின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் காட்சியளிக்கின்றன.

இது குறித்து, ஓவியர்கள் அய்யப்பா, ராஜப்பா ஆகியோர் கூறியது: காலத்தால் அழியாத தஞ்சாவூர் ஓவியக் கலை முதன் முதலாக கி.பி 16-ஆம் நூற்றாண்டில் சாகு மகராஜ் என்ற மராட்டிய குடும்பத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் சரபோஜி மன்னரால் இந்தக்கலை ஆதரித்து வளர்க்கப்பட்டது. தஞ்சாவூரிலேயே பிறந்து வளர்ந்த இந்த கலை. பின்பு ஆற்காடு, ஹைதராபாத், மைசூர் போன்ற பகுதிகளிலும் பரவியது.

தஞ்சாவூர் ஓவியம் என்பது வெறும் வண்ணங்களைக் கொண்டு மட்டும் வரைவது அல்ல. முதன் முதலில் மரப்பலகையிலும் துணியையும் கொண்டு இயற்கை பசையைப் பயன்படுத்தியும் தஞ்சாவூர் ஓவியங்கள் வரையப்பட்டன. பெரும்பாலும் இராமாயணக் காட்சிகள், கிருஷ்ண லீலைகள், லட்டு கிருஷ்ணர், ஆல்இலை கிருஷ்ணர், ராதாகிருஷ்ணர், பெருமாள், விநாயகர் போன்ற கடவுள் உருவங்கள், அரசர்கள் உருவம் கொண்ட ஓவியங்கள் அதிக அளவில் வரையப்பட்டது.

தஞ்சாவூர் ஓவியத்தை வரைய முதலில் மாம்பலகையில் வெள்ளைத்துணியில் கோந்து சேர்த்து ஒட்டவேண்டும் அதன் பின்பு சுக்கான் (சுண்ணாம்பு) பவுடரை கோந்துடன் சேர்த்து பசையாக்கி தடவவேண்டும். நன்றாக காய்ந்ததும் சிறியகல்லை கொண்டு அதனை சமப்படுத்தவேண்டும். அதன் மீது ஓவியத்துக்கான அவுட் லைன் வரையவேண்டும். பின்னர் தேவையான இடத்தில் அலங்காரக் கற்களை ஒட்டவேண்டும். உருவத்திற்கு ஏற்றவாறு அதை எம்போஸ் செய்யவேண்டும்.

பின்னர் தரமுள்ள தங்க நிறத்தால் ஆன காகிதத்தை  தேவையான இடங்களில் ஒட்டி வண்ணம் தீட்டினால் மிகவும் அழகான தஞ்சாவூர் ஓவியம் உருவாகிவிடும்.இதைப்போல அழகான முறையில் வரைந்த ஓவியங்கள்  பல்வேறு வீடுகளின்  பூஜை அறைகளில் வீற்றிருக்கின்றன.

மேலும், இந்த பாரம்பரிய தஞ்சாவூர் ஓவியக் கலையை தமிழ்நாடுஅரசு அருங்காட்சியகம் மற்றும் அரசு கலைப்பண்பாட்டுத்துறை சார்பில் இலவச முகாம்கள் நடத்தி பள்ளி மாணவ மாணவிகளுக்கு கற்றுத்தருகிறோம். .மேலும் மண்டல கலைப்பண்பாட்டுதுறை திருச்சிராப்பள்ளி மூலமாகவும் ஓவியர்கள் முகாமில் தஞ்சாவூர் ஓவியங்கள் தஞ்சாவூர் கண்ணாடி ஓவியங்களில் (பின்பக்கமாக) வரையும் ஓவியப் பயிற்சியும் அளித்து வருகிறோம்.

நேரு யுவகேந்திரா சார்பில்  நடைபெறும் NATIONAL INAUGURATION CAMP- ல் அனைத்து மாநில கலைஞர்களுக்கு ஓவியப் பயிற்சி அளித்துள்ளோம். தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் மூலமாக நடத்தப்படும் பாரம்பரிய ஓவியர்கள் முகாமில் தொடர்ந்து பங்கேற்று வருகிறோம்.

அரிய ஓவியக் கலையினை வளர்க்கவும் பாதுகாக்கும் நோக்கத்துடன் பல்வேறு வகையான அரசு நகராட்சி, ஊராட்சி, அரசு மேல்நிலை பள்ளிகள்,ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கல்வியல் கல்லூரிகளில் மற்றும் கல்வித்துறை சார்பில் நிரந்தர பணியில் உள்ள ஓவிய ஆசிரியருக்கான பணியிடை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறதுஇதுவரை 25,000-க்கும்  மேற்பட்டவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம், அரசு அருங்காட்சியகம், கலை பண்பாட்டுத்துறை தமிழ்நாடு, கைத்திறன் தொழில் வளர்ச்சி கழகம் பூம்புகார்சேலம் கைவினை பொருள் விற்பனை, சேவை விரிவாக்கபு மையத்தினர் எங்களை ஊக்குவித்து வருவது மன நிறைவைத்தருவதாகவும் ஓவியர்கள் ராஜப்பா, அய்யப்பா ஆகியோர் தெரிவித்தனர்

                                                                               

Top