logo
சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 500 -க்கும் மேல்பட்டோர் கைது

சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 500 -க்கும் மேல்பட்டோர் கைது

12/Oct/2020 10:19:48

புதுக்கோட்டை  மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்தங்களை எதிர்த்துபுதுக்கோட்டை மாவட்டத்தில் 14 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 500 -க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை நகரில் கீழராஜவீதியிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, நகரச் செயலர் சிற்பி உலகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எம்என். ராமச்சந்திரன், பி. திருநாவுக்கரசு, என்.ஆர். ஜீவானந்தம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

வேளாண் சட்டத் திருத்தங்களை விவசாயிகளைக் கடுமையாக பாதிக்கும் என்பதால் அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அறந்தாங்கியில் பேருந்து நிலையம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமையில் நகரசெயலாளர் பெரியசாமி முன்னிலையில் மறியல் போராட்டத்தை மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன் தொடக்கி வைத்தார்.


நிர்வாகிகள் ராஜேந்திரன், ராஜமாணிக்கம், ரத்தினம்,   ராதாகிருஷ்ணன், தண்டபாணி,கோமதி,நாடிமுத்து,சுமதி, பாண்டியம்மாள், கோவிந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.மறியலை முன்னிட்டு அறந்தாங்கி டிஎஸ்பி ஜெயசீலன் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல, மாவட்டத்தில் ஆலங்குடி,  கறம்பக்குடி, கந்தர்வகோட்டை, பொன்னமராவதி, திருமயம், அன்னவாசல் போன்ற பகுதிகளில் மொத்தம் 14 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

 


Top