logo
ஈரோடு மேட்டூர் சாலையை இருவழிப் பாதையாக மாற்றுவது குறித்து கலெக்டர் - எஸ்.பி. ஆய்வு

ஈரோடு மேட்டூர் சாலையை இருவழிப் பாதையாக மாற்றுவது குறித்து கலெக்டர் - எஸ்.பி. ஆய்வு

12/Oct/2020 05:13:00

ஈரோடு: ஈரோட்டில் போக்குவரத்து நிறைந்த சாலையாக  இருக்கும்  மேட்டூர் சாலையை மீண்டும் இருவழிப்பாதையாக மாற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஈரோட்டில் போக்குவரத்து மிகுந்த சாலையாக இருப்பது இந்த மேட்டூர் சாலைதான். பெருந்துறையில் இருந்து வரும் வாகனங்கள், .வி.என். சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் மேட்டூர் சாலை வழியாக சென்று வந்தன.

அதே போல், சத்தியமங்கலம் சாலையில் இருந்து வரும் வாகனங்கள்  அனைத்தும் மேட்டூர் சாலை வழியாக சென்று வந்தன. இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்தச்சாலை  ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. இதையடுத்து சத்தியமங்கலம்  சாலை வழியாகச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் நாச்சியப்பா  வீதி வழியாக திருப்பி விடப்பட்டன.

இதனால் இப்பகுதியில் காலை, மாலை வேளைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டதால் மேட்டூர் சாலையில் கடை வைத்திருக்கும் நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி .அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தனர்.

மேலும், இடையன்காட்டுவலசு முனிசிபல் காலனி மக்களும்  இந்த ஒரு வழிப் பாதையால் சிரமம் ஏற்படுவதாக கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், இன்று (12.10.2020) காலை ஈரோடு மேட்டூர் சாலையை  மாவட்ட ஆட்சியர் கதிரவன் எஸ்பி தங்கதுரை, மாநகராட்சி ஆணையாளர்  மா.இளங்கோவன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் நடராஜன், இளநிலை பொறியாளர் குழந்தையன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். போக்குவரத்து போலீஸாரிடமும் இது தொடர்பாக கருத்துகளை கேட்டறிந்தனர். ஆய்வின் போது போக்குவரத்து டிஎஸ்பி உதயகுமார் டவுன் டிஎஸ்பி ராஜூ உள்ளிட்ட  அதிகாரிகள் உடனிருந்தனர்

Top