logo
பழவேற்காடு ஏரியை தூர்வாரும் பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் டி.ஜெயக்குமார்

பழவேற்காடு ஏரியை தூர்வாரும் பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் டி.ஜெயக்குமார்

11/Oct/2020 01:26:28

இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்  வெளியிட்ட தகவல்:


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு ஏரியில் ஒவ்வோரு ஆண்டும் கோடை காலத்தில் மணல் திட்டுகள் ஏற்பட்டு முகத்துவாரம் அடைபட்டு விடுகிறது எனவும் இதனால் இந்தப் பகுதி மீனவர்கள் வங்கக் கடலில் சென்று தொழில் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது எனவும் அரசிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக ஏரியின் முகத்துவாரத்தினைத் தூர்வாரி, நிலைப்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மீனவர்கள் கோரி வந்தனர். அவர்களது கோரிக்கையின் அடிப்படையில் ரூ.26.85 கோடி மதிப்பீட்டில் பழவேற்காடு ஏரி தூர்வாரி ஆழப்படுத்தப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

தற்போது அரசால் அந்தப் பணிகளுக்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கும். இந்தப் பணிகள் நிறைவேற்றப்படுவதால் பழவேற்காடு கிராம மீனவர்கள் ஆண்டு முழுவதும் எந்தவித சிரமமும் இன்றி கடலுக்குச் சென்று தொடர்ந்து மீன்பிடி தொழிலை மேற்கொள்ள முடியும் என்றார் அவர்.

Top