logo
புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு நேரத்தை அறிவிக்கும் சங்கு மீண்டும் ஒலிக்குமா?

புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு நேரத்தை அறிவிக்கும் சங்கு மீண்டும் ஒலிக்குமா?

10/Oct/2020 10:14:43

புதுக்கோட்டையின் அடையாளங்களில் ஒன்றாக கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நகர மக்களுக்கு நேரத்தை அறிந்து கொள்ளும் வகையில் சாந்தநாத சுவாமி கோயிலருகே  ஒலித்து வந்த சங்கு கடந்த பல மாதங்களாக ஒலிக்காத நிலை நீடித்து வருகிறது.

புதுக்கோட்டை நகர மக்கள் நேரத்தை அறிந்து கொள்ளும் வகையிலும், வேலைக்குச்செல்லும் தொழிலாளர்கள் வேலை நேரத்துக்கு செல்வதை தெரிந்து கொள்ளும் நோக்கில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னதாக நகரின் மையப்பகுதியான பழைய அரண்மனை அருகேயுள்ள சாந்தநாதசுவாமி கோயில் பகுதியில்  கோபுரத்தில் சங்கு அமைக்கப்பட்டது.

மின்சாரத்தில் இயங்கும் இந்த சங்கு காலை 5 மணி 9 மணி, நண்பகல் 12 மணி, மாலை 5 மணி, இரவு 8 மணி ஆகிய நேரங்களைத் தெரிந்து கொள்ளும் வகையில் இயக்கப்பட்டு வந்தது. இதற்கென தனி ஊழியரும் பணியமர்த்தப்பட்டார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்த இந்த சங்கு சீரமைக்கப்பட்டு குறிப்பிட்ட நேரங்களில் ஒலித்துக் கொண்டிருந்தது. ஆனால், கடந்த பல மாதங்களாக இந்த சங்கு ஒலிக்கவில்லை. மீண்டும் பழுதடைந்துள்ளதால் ஒலி எழுப்பவில்லை எனக்கூறப்படுகிறது.

இதனால், நகரின் பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்குச் செல்லும் கூலித் தொழிலாளர்கள், பலவகைப் பணியாளர்கள் நேரத்தை அறிந்து கொள்ள உதவி வந்த சங்கொலி கேட்காமல் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் இந்த சங்கை சீரமைத்து மீண்டும் ஒலிக்கச்செய்ய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Top