09/Oct/2020 11:25:03
ஈரோடு கருங்கல்பாளையம் காவேரி சுங்கச்சாவடி அருகே வாரந்தோறும் புதன்கிழமை, வியாழக்கிமை மாட்டு சந்தை கூடும். இதில் புதன்கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவை மாடுகளும் வரத்தாகும். இந்த சந்தைக்கு வாரந்தோறும் 700 முதல் 900 மாடுகள் வரத்தாகும்.
மாடுகளை வாங்க தமிழகம் மட்டும் அல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலத்தினரும் வந்து வாங்கி செல்வர். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மாட்டு சந்தைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், கடந்த 6 மாதங்களாக கருங்கல்பாளையம் மாட்டு சந்தை கூட வில்லை.
இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவின்பேரில், கடந்த வாரம் முதல் சந்தை கூடியது. ஆனால், மாட்டு சந்தை செயல்படுவது குறித்து விவசாயிகளுக்கும், மாடு விற்பனையாளர்களுக்கும் முறையாக தெரிவிக்கப்படாததால் மாடுகள் வரத்தாகவில்லை.
இதையடுத்து, இந்த வாரம் கூடிய சந்தையில் நேற்று முதல் நேற்று(அக்.8) காலை வரை பசு மாடு, எருமை மாடு, கன்று என அனைத்தும் சேர்த்தே 130 மாடுகளே வரத்தானது. மாடுகளை வாங்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். ஆனால், மாடுகள் போதியளவில் வரத்து இல்லாததால் வெளிமாநில வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
முன்னதாக மாஸ்க் அணிந்து வரும் வியாபாரிகள் மட்டுமே சந்தை பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டனர். நுழைவு பகுதியில் வியாபாரிகளின் உடல் வெப்ப நிலையை தெரிந்துகொள்ளும் வகைகள் தெர்மல் ஸ்கேன்கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களின் கைகளில் சனிடைசர் மூலம் சுத்தப்படுத்தப்பட்டது. மேலும் வியாபாரிகளின் பெயர், ஊர் ,செல் நம்பர் முகவரி போன்றவையும் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து மாட்டு சந்தை உதவி மேலாளர் ராஜேந்திரன் கூறுகையில், மாட்டு சந்தை நடைபெறுவது குறித்து அனைத்து மாவட்ட மற்றும் வெளிமாநில வியாபாரிகளுக்கு போன் மூலமும், வாட்ஸ் அப் மெசேஜ் மூலமும் தகவல் தெரிவித்தோம். இதன்பேரில், வியாபாரிகள் வழக்கம்போல் மாடுகளை வாங்க வந்து விட்டனர்.
ஆனால், மாடு விற்பனை செய்யும் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் முறையாக தகவல் போய் சேராததால் இந்த வாரம் சொற்ப அளவிலேயே மாடுகள் வரத்தானது. அதனால் வரத்தான மாடுகள் 95 சதவீதம் விற்பனையானது. இனி வரக்கூடிய வாரங்களில் மாடுகள் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம், என்றார்.