logo
 இன்றைய சுற்றுலா தலம் சித்தன்னவாசல்

இன்றைய சுற்றுலா தலம் சித்தன்னவாசல்

08/Oct/2020 06:34:53

புதுக்கோட்டை மாவட்டத்தின் புகழ் பெற்ற சுற்றுலா தலமான சித்தன்னவாசல். புதுக்கோட்டையிலிருந்து அன்னவாசல் செல்லும் சாலையில்  சுமார் 17 கி.மீ. தொலைவில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

பழங்காலத்தில் சித்தர்கள்  இந்த மலைகளில் உள்ள குகைகளிலும் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. பூஜைகள் மற்றும் தியானங்களை சித்தர்கள்  மேற்கொண்டதற்கான இடங்கள் சமணர் படுக்கை என அடையாளம் காணப்படுகிறதுசித்தன்னவாசலில்  அத்தகைய பூஜை குகைகள் மற்றும் படுக்கைகள் சுமார் 17-க்கு மேற்பட்ட இடங்களில் அமைந்துள்ளன. இந்த படுக்கைகளின் அருகில் இரண்டாம் நூற்றாண்டை சோ்ந்த பிராமி தமிழ் கல்வெட்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. சித்தன்னவாசலில் உள்ள இந்த சமணர் படுக்கைகள் மற்றும் சமணர் கோயில்கள் ஆகியவை சோ்ந்து ஏழடி பட்டம் என அழைக்கப்படுகிறது.

 இரண்டாம் நூற்றாண்டினை சோ்ந்த சமணர் கோயில் ஒன்று இருபுறமும் மகாவீரர் சிலைகளுடன் இங்கு காணப்படுகிறது. இந்த கோயில் தியான மண்டபம் அல்லது அறிவார் கோயில் என்றழைக்கப்படுகிறது. இந்த கோயிலின் மேல்புறத்தில் (ceiling) மகேந்திர வர்மன் காலத்து ஒவியங்கள் வரையப்பட்டுள்ளது. இந்திய ஒவியக்கலை வரலாற்றில் அஜந்தா குகை ஒவியத்திற்கு அடுத்ததாக புகழ்பெற்ற ஒவியங்கள் இங்கு அமைந்துள்ளது.

இங்குள்ள குகைகளின் மேற்கு சரிவிலும், மூலிகைகளினால் வரையப்பட்ட (Fresco – Paintings) ஒவியங்கள் காணப்படுகிறது. தமிழர்களின் கலை பண்பாட்டினை பாறைசாற்றும் உயிரோட்டமுள்ள ஒவியங்களாக இவை திகழ்கின்றன். ஓர் அழகிய குளத்தில் தாமரை மலர்கள், அல்லி மலர்கள், மீன்கள் நீந்துவது போலவும் பசுக்கள் நிற்பது போலவும் யானைகள் தண்ணீர் குடிப்பது போலவும் கீரிப்பிள்ளை விளையாடுவது போலவும் அரசன் அரசியின் ஒவியங்களும் தத்தரூபமாக  வரையப்பட்டுள்ளன.

தொல்லியல் துறை மூலமாக சித்தன்னவாசல் பகுதிகளில் மேற்கொண்ட அகழ்வராய்ச்சிகளின்படி, இந்த பகுதிகளில் புதைக்கப்பட்ட பானைகளும் அவற்றில் மனித எலும்புகூடுகளும் காணப்பட்டுள்ளது. பழங்காலங்களில் இங்கு வசித்துவரும் சித்தர்கள் மறைவிற்கு பிறகு தாழிகளில் அடைத்து இங்கு அடக்கம் செய்யப்பட்டார்கள் என கருதப்படுகிறது. அவை முதுமக்கள் தாழி என்றழைக்கப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகளின் பொழுது போக்கிற்காக இங்கு சிறுவர் பூங்காவும் இசை நீருற்றுகளும் சுற்றுலாத்துறை சார்பாக நிறுவப்பட்டுள்ளது. முத்தமிழ் பூங்காவில் புதுக்கோட்டை மாவட்டம் சார்ந்த கலை மற்றும் இலக்கியச் செய்திகள் அடங்கிய சிற்பங்களின் பூங்காவும் (Miniature Statue Park) இங்கு அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து தங்கி செல்வதற்கு ஏதுவாக பயணியர் மாளிகை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.

தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள குகை ஓவியங்கள் மற்றும் சமணர்படுக்கைகள் ஆகியவற்றினை காண நுழைவு கட்டணமாக இந்தியர்(ஒரு நபருக்கு) ரூ.5/-ம், வெளிநாட்டினருக்கு ரூ.100/-ம் வசூலிக்கப்படுகிறது.

சித்தன்னவாசல் சுற்றுலா வளர்ச்சி சங்கத்தின் சார்பாக படகு குழாம் ஒன்றும் இங்கு செயல்படுகிறது. அதில் சாவாரி செய்ய துடுப்புப்படகுக்கு பெரியவர் ரூ.20, சிறியவர் ரூ.10. மலை அழகும், பூங்காக்களின் பொலிவும், சிற்பக்கலை மற்றும் ஒவியக்கலைகளின் பிரமிப்பும் பார்ப்பவர்களை பரவசப்படுத்தும் வகையில் உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமாக சித்தன்னவாசல் திகழ்கிறது.

Top