logo
ஈரோடு மோகன்தோட்டம் பகுதியில் வெளி நபர் நடமாட்டத்தை தடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் போராட்டம்

ஈரோடு மோகன்தோட்டம் பகுதியில் வெளி நபர் நடமாட்டத்தை தடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் போராட்டம்

15/Feb/2021 10:12:03

ஈரோடு, பிப்:ஈரோடு கோணவாய்க்கால், மோகன் தோட்டம் பகுதியில் வெளி நபர்கள் மற்றும் சமூக விரோதிகளின் நடமாட்டத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


ஈரோடு கோண வாய்க்கால்  மோகன்தோட்டம் பகுதியில் -200 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இந்தப் பகுதியை ஒட்டிய காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு மாநகராட்சி சார்பில் வாகனங்கள் குப்பைகளை சேகரித்து சென்று வருகின்றன. இந்நிலையில் அண்மை காலமாக இந்த பாலம் வழியாக அடையாளம் தெரியாத சில வெளி நபர்கள் கும்பல் கும்பலாக வந்து அங்குள்ள வயல்வெளி பகுதிகளில் மது அருந்துகின்றனர்.சில சட்டவிரோத செயல்கள் நடப்பதாக அப்பகுதி மக்கள் ஏற்கனவே புகார் மனு அளித்திருந்தனர். இதனால் இந்த பகுதியை கடந்து செல்லும்  பெண்களும் சிறுவர் சிறுமிகளும் அச்சத்துடனே இந்த பகுதியை கடந்து செல்லும் நிலை நீடித்து வருகிறது. 

இந்நிலையில் திங்கள்கிழமை  காலை 8 மணி அளவில் மோகன் தோட்டம் நுழைவு வாயில் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக குப்பைகளை சேகரிக்கும் மாநகராட்சி வண்டிகள் மேற்கொண்டு நகர முடியாமல் அங்கேயே நின்றன. இதுகுறித்து தகவலறிந்த சூரம்பட்டி காவல் ஆய்வாளர்  ரவிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 


அப்போது எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத வெளிநபர்கள் கும்பல் கும்பலாக வந்து மது அருந்துகின்றனர். இதனால் எங்கள் குழந்தைகளை அச்சத்துடன்  வீட்டை விட்டு வெளியே அனுப்பும் நிலை  உள்ளது. அதில் ஒரு சிலர் அங்கேயே வாந்தி எடுத்து அலங்கோலமாக படுத்து உறங்கி விடுகின்றனர். பெரியவர்களே இந்த பகுதியை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். பெண் குழந்தைகள் பாடு கேட்கவே வேண்டாம்.

 ஏற்கெனவே கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வீரப்பன்சத்திரம் தெப்பகுளம் பகுதியில் இதே போன்று தான் வெளி நபர்கள் நடமாட்டம் அதிகரித்ததால்  இரண்டு ரவுடிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம்  நடந்துள்ளது. அதைப் போன்ற சூழ்நிலை இங்கும் வந்து விடக்கூடாது. போலீசார் இந்த பகுதியில் இரவு நேரங்களில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி வெளிநபர் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் உங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுங்கள் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.ஏறத்தாழ 3 மணி நேரமாக நீடித்த இந்த ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.

Top