logo
பத்திரிகையாளர்களுக்கும் அஞ்சல் வாக்கு செலுத்தும் வசதியை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்த வேண்டும்

பத்திரிகையாளர்களுக்கும் அஞ்சல் வாக்கு செலுத்தும் வசதியை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்த வேண்டும்

10/Feb/2021 06:52:43

புதுக்கோட்டை, பிப்:தேர்தல் காலங்களில் தேர்தல் பணிபுரியும் அரசு அலுவலர்களைப் போலவே பத்திரிகையாளர்களுக்கும் அஞ்சல் வாக்கு செலுத்தும் வசதியை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்த வேண்டுமென புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


 புதுக்கோட்டையில் (10.2.2021) புதன்கிழமை  நடைபெற்ற மாவட்ட பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்துக்கு மாவட்டத்தலைவர் சு. மதியழகன் தலைமை வகித்தார். இது வரை நடைபெற்ற  பணிகள் குறித்த செயல்பாட்டறிக்கையை சங்கச்செயலர் சா. ஜெயப்பிரகாஷ் சமர்பித்து உரையாற்றினார். வரவு-செலவு அறிக்கையை பொருளாளர் கே. சுரேஷ் வாசித்தார்.

இதில் பங்கேற்ற உறுப்பினர்கள் இரா.ப. சந்திரசேகரன், ப. முருகேசன், ஆர். மோகன்ராம், ராஜ்குமார், பாண்டியன், பாலகிருஷ்ணன், அரவிந்த், ராஜாமுகமது, பாலசுப்பிரமணியன், கமல் உள்பட பலர் தங்களது கருத்துகளையும் யோசனைகளையும் குறிப்பிட்டு பேசினர்.


  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  தேர்தல் காலங்களில் தேர்தல் பணிபுரியும் அரசு அலுவலர்களைப் போலவே பத்திரிகையாளர்களுக்கும் அஞ்சல் வாக்கு செலுத்தும் வசதியை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்த வேண்டும். மாநில அரசால் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பேருந்து பயண அட்டையை மாநிலம் முழுவதும் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பயன்படுத்தும் வகையில் விதிமுறைகளைத் தளர்த்தி வழங்க வேண்டும்.


 புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு முறையான/பாதுகாப்பான நிறுத்துமிடம் அமைக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் எளிமையாக/இயல்பாக சென்று வருவதற்கு ஏற்ப வாகன நிறுத்துமிட விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

முன்னதாக, அறந்தாங்கி தினமணி நிருபர் கார்த்திகேயனின் மறைவுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. அனைவரையும் துணைச்செயலர் க. சிவகுமார் வரவேற்றார். நிறைவாக துணைத்தலைவர் இரா. பகவத்சிங் நன்றி கூறினார்.

இதில், மாவட்டம் முழுவதுமிருந்து சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.



Top