logo
அக்.12-இல் நியாயவிலைக்கடை பணியாளர் தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

அக்.12-இல் நியாயவிலைக்கடை பணியாளர் தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

08/Oct/2020 06:01:54

நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் சார்பில் அக்.12-ல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன்

சிதம்பரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மேலும் அவர் கூறியது: நியாயவிலைக் கடைகளில் தொழில்நுட்ப குறைபாடுகளை சீர் செய்ய வலியுறுத்தி  வரும் திங்கள்கிழமை(அக்.12) மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், சென்னை சேப்பாக்கம் வளாகத்திலும் உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நியாயவிலைக்கடைகளுடைய சேவைகளை நூறு சதவீத கணினி மயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒரே நேரத்தில் நிறைவேற்றாமல், படிப்படியாக தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. வெள்ளை அட்டைகளிலிருந்த குடும்ப அட்டைகள் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டன. ஸ்மார்ட் கார்டுகள் தற்போது பயோ மெட்ரிக் கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களின் போது பிஹெச் கார்டு (periority Card), என்பிஹெச் (Non periority Card) கார்டு என்ற வேறுபாட்டை பிரித்ததில் சரியான அணுகுமுறை பின்பற்றப்படாத காரணத்தினால் வசதி உள்ளவர்களுக்கும், வசதி அற்றவர்களுக்கும் முரண்பாடான வகையில் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது.

முதல் பிரச்னை அடுத்து பயோ மெட்ரிக் குடும்ப அட்டை வழங்கிய பிறகு அனைத்துக் கடைகளிலும் நெட்வொர்க் கிடைப்பதில் செல்போன் கோபுரம் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதற்கு அடிப்படைக் காரணம் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செல்போன் கோபுரங்களை தனியார் தொலைபேசி நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதித்தது. இது மத்திய அரசின் அடிப்படைக் கொள்கையாகும். இதனால் இணையதளம் சரியாக கிடைக்காததால், பயோ மெட்ரிக் சிஸ்டம் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இரண்டாவதாக சர்வர் பிரச்சனை. அந்த தொழில்நுட்பமும் சீராக அனைத்து இடங்களிலும் பயன்படவில்லை. நியாயவிலைக் கடைகளில் தரமான கருவிகள் வழங்கப்படவில்லை. 4 மாவட்டங்களில் மட்டும் புதிய தொழில்நுட்பக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் தரமான புதிய கருவிகள் வழங்கப்பட வேண்டும். விரல் ரேகை அடிப்படையில் பொருள்கள் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் கரோனா தொற்று அதிகமாக இருக்கும் இந்த வேளையில் அதை பயன்படுத்தினால் கரோனா பரவுவதற்கான  சூழ்நிலை அதிகரிக்கும்.

எனவே, அதை ரத்து செய்துவிட்டு விழித்திரை அடிப்படையில் ஆதார் கார்டுகளை இணைத்து பொருள்களை வழங்குவதற்கான தொழில்நுட்ப மாற்றத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி இணைப்பு கிடையாது. 4ஜி இணைப்பு இருந்தால்தான் நியாயவிலைக் கடைகளில் கருவிகள் சரிவர வேலை செய்யும். தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அராசல் 4ஜி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பிஎஸ்என்எல் 4ஜி இணைப்பு வழங்கப்படாதது ஆச்சரியமாக உள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி இணைப்பு உடனடியாக வழங்க வேண்டும்.

அனைத்து நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்போன் வழங்க வேண்டும். மேலும், அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கு இணையவழி மோடம் வழங்க வேண்டும். இந்த தொழில்நுட்பக் குறைபாடுகளை கலைந்தால்தான் பொதுவிநியோகத் திட்டத்தின் பலன்கள் மக்களைச் சென்றடையும்.

இந்த சிக்கல்கள் வந்த பிறகும் பழைய முறையிலேயே பொருள்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பழைய முறையே தொடர்ந்தால் மீண்டும் பிரச்சனைகள் உருவாகும். எனவே, விஞ்ஞானம் வேகமாக வளர்ந்துள்ள நிலையில் முறையான விஞ்ஞான தொழில்நுட்பத்தை நடைமுறைபடுத்தாவிடில் முறைகேடுகளையும், குறைபாடுகளையும் அதிகரிக்கும். இதனால் மக்களுக்கும், நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கும் பிரச்னை ஏற்படுகிறது. எங்களது நியாயமான கோரிக்கைகளை வைத்து பல போராட்டங்கள் நடத்தியும் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. கரோனா சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கும், பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.

சங்கத்தை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தொழில்நுட்ப குறைபாடுகளை தமிழக அரசு சீர் செய்ய வேண்டும் என்றார் கு.பாலசுப்பிரமணியன். இதில்,தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா, மாநில துணைத் தலைவர் துரை சேகர், நிர்வாகிகள் கனகசபை, செந்தில்குமார், ராமதாஸ், நடராஜன் உள்பட பலர் உடனிருந்தனர். 

  


Top