logo
இந்த ஆண்டின் இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி கிடைத்துவிடும்..! உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை

இந்த ஆண்டின் இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி கிடைத்துவிடும்..! உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை

08/Oct/2020 10:17:24

நடப்பாண்டின் இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கொரோனா தடுப்பூசி அறிமுகமாகிவிடும் என்று உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் (அக்.6) கூறியதாவது: கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முழுமையாக வெற்றி பெற, நம் அனைவருக்கும் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. பாதுகாப்பான, செயல் திறன் மிக்க அத்தகைய கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் நமக்குக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போராட்டம் முழுமை பெற வேண்டுமென்றால், அந்தத் தடுப்பூசி அனைத்துத் தரப்பினருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்காக உலக நாடுகளின் தலைவா்கள் ஒற்றுமையுடனும் அரசியல் உறுதிப்பாடுடனும் செயலாற்ற வேண்டும் என்றார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுள் உள்பட உலகின் அனைத்து பகுதிகளுக்கும் சரிசமமாக கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யவதற்காக, ‘கோவாக்ஸ்’ என்ற திட்டத்தை உலக சுகாதார மையம் முன்னின்று செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் பல முன்னணி தனியார் மற்றும் அரசு அமைப்புகள் இணைந்து பணியாற்றி வருகின்றன. சோதனை முறையில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகள் குறித்த தகவல்களை நாடுகள் தங்களுக்கிடையே பரிமாறிக்கொள்ளும் இந்தத் திட்டத்தில், இதுவரை 168 நாடுகள் இணைந்துள்ளன.

ஆனால், அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய நாடுகள் இதுவரை இந்தத் திட்டத்தில் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதன்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 3.6 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 10.55 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோய்க்கு பலியாகியுள்ளனர்..

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 77 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நாட்டில் 2.15 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பு காரணமாக பலியாகியுள்ளனர்.

Top